வான்வெளிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் லாபம் ஈட்டிய எமிரேட்ஸ்!

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், 2026-27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வரிக்கு முந்தைய லாபமாக AED 4.1 பில்லியனைப் பதிவு செய்துள்ளது. 

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கான நிதிநிலை அறிக்கையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள், வான்வெளிக் கட்டுப்பாடுகள் மற்றும் ஜெட் எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் AED 4.1 பில்லியன் லாபத்தை எமிரேட்ஸ் பதிவு செய்துள்ளது.

மேலும், இக்காலகட்டத்தில் எமிரேட்ஸின் மொத்த வருவாய் AED 66.2 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துச் சேவைகளில் தொடர்ந்து நிலவிய தேவையே நிறுவனத்தின் வருவாய்க்கு முக்கியப் பங்களிப்பாக அமைந்துள்ளது

நிதிநிலை மற்றும் செயல்பாட்டு விவரங்கள்

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் மொத்த வருவாய் AED 66.2 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 12% குறைவாகும். மேலும், வரிக்கு முந்தைய லாபம் AED 3.7 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

பிராந்திய வான்வெளிக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை 22% குறைந்து 2.18 கோடியாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனம் தனது விமானச் சேவை வலையமைப்பில் 91% மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம், 78 நாடுகளில் உள்ள 150 விமான நிலையங்களுக்கு எமிரேட்ஸ் நிறுவனம் விமானச் சேவைகளை வழங்கியுள்ளது. 

கடல்வழிப் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக விமான சரக்கு சேவைக்கான தேவை அதிகரித்தது. இதனால் எமிரேட்ஸ் சரக்கு விமான சேவையான Skycargo-வின் வருவாய் 52% அதிகரித்துள்ளது.

முதலீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டம்

சவாலான காலத்திலும் 9 புதிய ஏர்பஸ் A350 விமானங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் 12 விமானங்களின் உட்புறங்களை புதுப்பித்துள்ளது. இதுமட்டுமின்றி 36 விமானங்களில் அதிவேக Starlink Wi-Fi வசதியை நிறுவியுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறுகையில், “கடந்த ஆறு மாதங்கள் மிகவும் சவாலானதாக இருந்தன. பிராந்திய மோதல்கள் மற்றும் எரிபொருள் விலை இரட்டிப்பான போதிலும், எங்களது வலுவான வர்த்தக மாதிரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் எங்களை நிலையாக வைத்திருக்க உதவியுள்ளன. அமீரக அரசின் விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: