தெருநாய்கள், தெருபூனைகளுக்கு பாதுகாப்பான புதிய மையம்… துபாயில் ஒருங்கிணைந்த Pet Shelter திறப்பு!

துபாயில் தெருவில் சுற்றித் திரியும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக பராமரிக்க, Warsan Birds and Pets Market-ல் புதியஒருங்கிணைந்த செல்லப்பிராணி காப்பகத்தை துபாய் நகராட்சி திறந்துள்ளது. இதனுடன், செல்லப்பிராணிகளை தத்தெடுக்க விரும்புபவர்களுக்காக புதிய டிஜிட்டல் Adoption Platform-மும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பகத்தின் வசதிகள்

இந்த மையத்தில் தெருவில் மீட்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுக்கு,

  • மருத்துவ சிகிச்சை
  • அறுவை சிகிச்சை வசதி
  • பராமரிப்பு (Grooming)
  • மறுவாழ்வு (Rehabilitation)
  • தத்தெடுக்கும் சேவை (Adoption)

என அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படும்.

செல்லப்பிராணியை தத்தெடுக்கும் முன் நேரம் செலவிடலாம்

இந்த புதிய காப்பகத்தில், தத்தெடுக்க விரும்பும் செல்லப்பிராணிகளுடன் சில நேரம் செலவிடுவதற்காக Interactive Adoption Rooms அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த செல்லப்பிராணி குடும்பத்திற்கு ஏற்றதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். மேலும், பொதுமக்களுக்கு உதவும் Customer Happiness Centre-களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்தே செல்லப்பிராணியை தேர்ந்தெடுக்கலாம்

புதிய டிஜிட்டல் தளத்தின் மூலம், தத்தெடுக்கக் கிடைக்கும் நாய்கள் மற்றும் பூனைகளின் புகைப்படங்கள், உடல்நிலை மற்றும் குணம் போன்ற தகவல்களை முன்கூட்டியே பார்த்து, அதன்பிறகு காப்பாகத்திற்கு சென்று தத்தெடுக்கும் நடைமுறையை தொடரலாம்.

வழிதவறிய செல்லப்பிராணிகளுக்கும் உதவி

வழிதவறி காணாமல் போன செல்லப்பிராணிகளை அவற்றின் உரிமையாளர்களுடன் மீண்டும் இணைக்கவும் இந்த மையத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிம விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, செல்லப்பிராணிகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். 

காயமடைந்த தெரு விலங்குகளுக்கும் சிகிச்சை

காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் மற்றும் தெருபூனைகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க Vets Fur Pets Veterinary Clinic மற்றும் Phoenix Veterinary Clinic ஆகிய கால்நடை மருத்துவமனைகளுடன் துபாய் நகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.

பூனைகளுக்கு TNR திட்டம் தொடரும்

தெருபூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, துபாய் நகராட்சி Trap-Neuter-Return (TNR) திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தும். இந்த திட்டத்தில், தெருபூனைகள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தேவையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பான இடங்களில் மீண்டும் விடப்படுகின்றன. 

இதன் நோக்கம் என்ன?

இந்த புதிய காப்பகம் மூலம், தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, செல்லப்பிராணிகளை பொறுப்புடன் வளர்க்கும் பழக்கத்தையும், தத்தெடுக்கும் கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதே துபாய் நகராட்சியின் நோக்கமாகும்.

இந்த முயற்சி, மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற “One Health” அணுகுமுறையின் ஒரு பகுதியாகவும் செயல்படுத்தப்படுகிறது.

TAGGED: