Perseids விண்கல் மழையை நேரில் காண ராஸ் அல் கைமாவில் சிறப்பு ஏற்பாடு!

ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் நிகழும் ‘Perseids’ விண்கல் மழையை காண்பதற்காக துபாய் வானியல் குழு ராஸ் அல் கைமாவில் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 8 நாட்களுக்குப் புகழ்பெற்ற ‘பெர்சீட்ஸ் விண்கல் மழை’ (Perseids Meteor Shower) நிகழவுள்ளது. இந்த நாட்களில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 50-க்கும் மேற்பட்ட விண்கல்கள் வானத்தைக் கடந்து செல்வதைக் கண்டு ரசிக்கலாம்.

Dubai Astronomy Group நடத்தும் சிறப்பு நிகழ்வு 

இந்த அரிய விண்வெளி நிகழ்வை மக்கள் நேரில் கண்டு மகிழும் வகையில், துபாய் வானியல் குழு (Dubai Astronomy Group – DAG) ‘Perseids Meteor Shower 2026’ எனும் சிறப்பு இரவுப் பார்வைக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 11:00 மணி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகாலை 3:00 மணி வரை, ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பாளர்களுக்கு நிபுணத்துவம் பெற்ற வானியலாளர்களின் வழிகாட்டுதலுடன், கோள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கான தொழில்முறை தொலைநோக்கிகளும் வழங்கப்படும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியமாகும்.

விண்கல் மழையை காண முக்கிய குறிப்புகள் 

நகர வெளிச்சத்திலிருந்து தள்ளியிருங்கள்: நகரத்தின் செயற்கை விளக்கு வெளிச்சம் இல்லாத மலைப்பகுதிகள் அல்லது பாலைவனப் பகுதிகள் விண்கல் மழையை காண சிறந்த இடமாக இருக்கும். 

கண்களுக்கு ஓய்வு: இருண்ட பகுதிக்குச் சென்றதும், இருளுக்கு உங்கள் கண்கள் பழக சுமார் 20 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள்.

டெலஸ்கோப் தேவையில்லை: எரிகல் மழையைக் காண்பதற்குத் தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் வானத்தை பார்த்து ரசிக்கலாம்.

பொறுமை அவசியம்: எரிகற்கள் சீரற்ற இடைவெளியில் தோன்றும் என்பதால், அதிக நேரம் காத்திருந்தால் அதிகமான எரிகற்களை காணலாம்.

புகைப்படம் எடுக்க: கேமராவில் ‘Long Exposure’ அமைப்பைப் பயன்படுத்தி, டிரைபாட் (Tripod) உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம்.

குறிப்பு: ஜெபல் ஜெய்ஸில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக துபாய் வானியல் குழு தெரிவித்துள்ளது. புதிய இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Dubai Astronomy Group – DAG இணையதளத்தில் வெளியாகும்.

TAGGED: