அபுதாபியின் முகமது பின் சயீத் நகர நிலையம் மற்றும் புஜைராவின் அல் ஹிலால் நகர நிலையத்தைத் தொடர்ந்து திறக்கப்படவுள்ள எதிஹாட் ரயிலின் மேலும் 8 புதிய நிலையங்களுக்கான திறப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமீரகத்தின் முதலாவது தேசிய பயணிகள் ரயில் சேவையான எதிஹாட் ரயில், 2026 ஜூன் 30 அன்று அபுதாபி – அல் ஃபுஜைரா இடையே தனது முதல் பயணத்தை தொடங்கி நாட்டின் போக்குவரத்துத் துறையில் வரலாற்றுச் சாதனை படைத்தது. அபுதாபியின் முகமது பின் சயீத் நகர நிலையத்தையும் புஜைராவின் அல் ஹிலால் நகர நிலையத்தையும் வெறும் 1 மணிநேரம் 45 நிமிடங்களில் இணைக்கும் இந்த சேவை தொடங்கப்படுவதற்கு முன்பே 10,000-க்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் விற்பனையாகின.
சுமார் 900 கிலோமீட்டர் நீளமுள்ள எதிஹாட் ரயில் பாதை, அமீரகத்தின் 11 முக்கிய நகரங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது. இதில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள 2 ரயில் நிலையங்களைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்படவுள்ள மேலும் 8 ரயில் நிலையங்களுக்கான திறப்பு தேதிகள் வெளியாகியுள்ளன.
எதிஹாட் ரயில் நிலையங்கள் திறக்கப்படும் கால அட்டவணை
1. Jumeirah Golf Estates மற்றும் Al Dhaid (செப்டம்பர் 30, 2026)
துபாயின் ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் நிலையம் மற்றும் ஷார்ஜாவின் அல் தைது ரயில் நிலையம் ஆகியவை செப்டம்பர் 30 அன்று திறக்கப்படவுள்ளன. இது அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் கிழக்குக் கடற்கரை நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தை பெருமளவில் எளிதாக்கும்.
2. Madinat Zayed மற்றும் Liwa (நவம்பர் 30, 2026)
அல் தஃப்ரா பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு பயணிகளுக்கு வசதியாக, மதினாத் சயீத் மற்றும் லிவா ரயில் நிலையங்கள் திட்டமிட்டதை விட முன்னதாகவே நவம்பர் 30 அன்று திறக்கப்படுகின்றன.
3. Al Sila, Al Dhannah மற்றும் Al Mirfa (டிசம்பர் 30, 2026)
நாட்டின் மேற்குப் பகுதியான அல் தஃப்ராவில் வழித்தடத்தை விரிவாக்கும் வகையில், டிசம்பர் 30 அன்று அல் சிலா, அல் தன்னா, மற்றும் அல் மிர்ஃபா ஆகிய ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
4. Sharjah University City (மார்ச் 30, 2027)
ஷார்ஜா பல்கலைக்கழக நகரம் ஷார்ஜா பல்கலைக்கழக நகரம் நிலையம் 2027 மார்ச் 30 அன்று திறக்கப்படும். இதனுடன் இத்திஹாத் ரயிலின் முதல் கட்ட பயணிகள் சேவை முழுமை பெறும்.
பயணச்சீட்டு கட்டண விவரங்கள்
சேவை தொடக்கத்தை முன்னிட்டு, எதிஹாட் ரயில் நிறுவனம் வழக்கமான கட்டணத்தில் 50% சலுகையை அறிவித்துள்ளது.
- Comfort Class: AED 55
- Premium Class: AED 120
கூடுதல் கட்டண சலுகைகள்
- 2 முதல் 17 வயது வரை: 50% கட்டண தள்ளுபடி
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்: 20% கட்டண தள்ளுபடி
- 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: கட்டணமின்றி இலவசப் பயணம்
எதிஹாட் ரயிலின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது etihadrail.ae இணையதளம் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
