பாலைவன இரவுகளை ரசிக்கத் தயாரா? துபாயில் அல் ருவைய்யா குளிர்கால முகாம் முன்பதிவு தொடக்கம்!

துபாயின் 2026-27 குளிர்கால முகாம் சீசனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அல் ருவைய்யா பகுதியில் 600 முகாம்கள், கேரவன்களுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் தினசரி வாடகை முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

துபாயில் பாலைவன இரவு அனுபவத்தை விரும்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. துபாய் நகராட்சி, 2026-2027ஆம் ஆண்டுக்கான Winter Camping Season முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

அல் ருவைய்யா (Al Ruwayyah) பகுதியில் அமைந்துள்ள இந்த முகாம் அமைவிடங்களின் எண்ணிக்கை இம்முறை 120% உயர்த்தப்பட்டு, மொத்தம் 600 முகாம்கள் பொதுமக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Winter Camping Season 2026-27

நடப்பு சீசன் 2026 நவம்பர் 1 முதல் 2027 ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளது. வழக்கமாக முகாம் அமைக்க 400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடங்கள் வழங்கப்படும் நிலையில், இம்முறை 800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய இடங்களும் வழங்கப்படுகின்றன.

மேலும், முதன்முறையாக கேரவன்களுக்காக (Caravans) 50 பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்தமாகக் கூடாரம் அமைக்கும் வசதி இல்லாதவர்களுக்காக, தேவையான அனைத்து வசதிகளுடன் முழுமையாக அமைக்கப்பட்ட 10 முகாம்கள் தினசரி வாடகைக்கு வழங்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு மற்றும் முக்கிய விதிமுறைகள் 

விருப்பமுள்ளவர்கள் wintercamp.dm.gov.ae என்ற இணையதளம் அல்லது DubaiNow செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். முகாம்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை வாடகைக்குக் கிடைக்கும். கேரவன் இடங்கள் மற்றும் தினசரி வாடகை முகாம்களுக்கு எனத் தனித்தனியான முன்பதிவு விதிமுறைகள் உள்ளன.

அனுமதி பெற்ற பிறகு, முகாம் அமைந்துள்ள பகுதியைத் தற்காலிக வேலிகள்    மூலம் சுற்றி அடைத்துப் பராமரிக்க வேண்டும். மேலும், இந்த முகாம்கள் குடும்பப் பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனத் துபாய் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.