துபாயின் வளர்ச்சிக்கு சாட்சியாக இருந்த ‘Toyota Building’ இடிக்கப்பட உள்ளது

1974 முதல் துபாயின் வளர்ச்சிக்கு சாட்சியாக நின்ற புகழ்பெற்ற ‘Toyota Building’ 2027ஆம் ஆண்டு இடிக்கப்பட உள்ளது.

1974ஆம் ஆண்டு கட்டப்பட்ட துபாயின் புகழ்பெற்ற ‘Toyota Building’ அடுத்தாண்டு, 2027ஆம் ஆண்டு இடிக்கப்பட உள்ளது. சுமார் 65 மீட்டர் உயரமும் 15 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டிடத்தின் அதிகாரப்பூர்வ பெயர் ‘Nasser Rashid Lootah Building’.

கட்டிடத்தின் கூரையில் ‘Toyota’ நிறுவனத்தின் விளம்பரப் பலகை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது பொதுமக்களிடையே ‘Toyota Building’ என்ற பெயரில் பிரபலமானது. 2018ஆம் ஆண்டு விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்ததால் அந்தப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. பின்னர், 2022ஆம் ஆண்டு மீண்டும் ‘Toyota’ பெயர்ப்பலகை நிறுவப்பட்டது.

தற்போது கட்டிடத்தை இடிக்கும் பணிகள் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுக்கு 2026 டிசம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாடகை குறைவு… நினைவுகள் அதிகம்!

ஷேக் சயீத் சாலையில் அமைந்துள்ள பல குடியிருப்புகளுடன் ஒப்பிடும்போது, ‘Toyota Building’ல் வாடகை குறைவாக இருந்ததால் பல ஆண்டுகளாக ஏராளமானோர் இங்கு வசித்து வந்தனர். இதனால், கட்டிடத்தைச் சுற்றிய தங்களது பழைய நினைவுகளை பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

1974 முதல் 2027 வரை துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சியை நேரில் கண்ட இந்தக் கட்டிடம், வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பல தலைமுறைகளின் நினைவுகளையும் கதைகளையும் சுமந்த ஒரு அடையாளம்.