KG முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது; அமீரகம் அறிவிப்பு!

2026-27 கல்வியாண்டு முதல், அமீரகம் முழுவதும் KG முதல் 2-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கப்படாது என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரக அரசுப் பள்ளிகளில் கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் (Homework) ரத்து செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கியக் கல்விச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026-2027 கல்வியாண்டிற்கான இந்த மாற்றங்கள் குறித்துக் கல்வித் துறை அமைச்சர் சாரா அல் அமீரி விரிவாக விளக்கியுள்ளார்.

வீட்டுப்பாடம் ரத்து (KG முதல் Grade 2 வரை):

சிறிய குழந்தைகளுக்குப் போதிய ஓய்வு, விளையாட்டு, குடும்பத்துடனான நேரம் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைத்து, வகுப்பறையிலேயே கற்றலை முழுமைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

புதிய 50-50 தேர்வு முறை (Grade 9 முதல் 12 வரை):

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50% மதிப்பெண்கள் மத்திய அரசுத் தேர்வுகளின் மூலமும், மீதி 50% மதிப்பெண்கள் பள்ளி அளவிலான தேர்வுகளின் மூலமும் வழங்கப்படும்.

டிஜிட்டல் திரைகளுக்குப் பதில் புத்தகங்கள் (Grade 6):

அதிகப்படியான கணினி  பயன்பாட்டைக் குறைக்க, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரபி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்குப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இருப்பினும், AI மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு டிஜிட்டல் கருவிகள் தொடரும்.

செய்முறை வழி கற்றல் (Project-Based Learning – Grade 7):

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மனப்பாட முறையைத் தவிர்த்து, கற்றதை நடைமுறையில் பயன்படுத்தும் நோக்கில் ‘பிராஜெக்ட்’ வழி மதிப்பீட்டு முறை (PBLA) அறிமுகப்படுத்தப்படுகிறது.

தேசியக் கல்வி சாசனம் (National Education Charter):

அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாசனத்தின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் ‘சார்ட்டர் பாஸ்போர்ட்’ (Charter passport) வழங்கப்பட்டு கல்வித் தரம் உயர்த்தப்படும்.

அமீரகத்தில் இந்த கல்வியாண்டில் சுமார் 1.277 மில்லியன் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் நிலையில், 11 புதிய பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

TAGGED: