2027-ல் அமீரகத்தில் எத்தனை தொடர் விடுமுறை? முழு பட்டியல் இதோ!

2027-ஆம் ஆண்டில் அமீரகத்தில் வரவிருக்கும் அதிகாரப்பூர்வ பொது விடுமுறைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள்.

சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடும் அமீரக வாழ் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 2027-ஆம் ஆண்டில் வரவிருக்கும் பொது விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்கள் பயணத் திட்டங்களை இப்போதே திட்டமிட உதவும் அமீரகத்தின் 2027 பொது விடுமுறை பட்டியல் இதோ. 

ஆங்கிலப் புத்தாண்டு 

தேதி: ஜனவரி 1, 2027 

2027 புத்தாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமை வருகிறது. இதனுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்வதால், ஆண்டின் தொடக்கத்திலேயே 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

ஈத் அல் பித்ர் 

எதிர்பார்க்கப்படும் தேதிகள்: மார்ச் 9 முதல் மார்ச் 11 அல்லது மார்ச் 12 வரை 

ஷவ்வால் மாதப் பிறைத் தென்படுவதைப் பொறுத்து, ஈத் அல் பித்ர் விடுமுறை வார இறுதி நாட்களுடன் இணைந்து மொத்தம் 3 முதல் 6 நாட்கள் வரை நீண்ட விடுமுறையாக அமைய வாய்ப்புள்ளது.

ஈத் அல் அதா 

எதிர்பார்க்கப்படும் தேதிகள்: மே 15 முதல் மே 18 வரை விடுமுறை 

அரஃபா நாளைத் தொடர்ந்து வரும் ஈத் அல் அதா பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். துல்ஹிஜ்ஜா மாதப் பிறை தென்படுவதைப் பொறுத்து அதிகாரப்பூர்வ தேதிகள் இறுதி செய்யப்படும்.

இஸ்லாமியப் புத்தாண்டு 

எதிர்பார்க்கப்படும் தேதி: ஜூன் 6, 2027 விடுமுறை 

பிறைத் தென்படுவதைப் பொறுத்து அதிகாரப்பூர்வ விடுமுறை தேதி அறிவிக்கப்படும்.

மிலாதுன் நபி

எதிர்பார்க்கப்படும் தேதி: ஆகஸ்ட் 14, 2027 

ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-ஆம் நாளில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திர நாட்காட்டி மற்றும் பிறைத் தென்படுதலுக்கு ஏற்ப இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

ஈத் அல் எதிஹாட் 

தேதிகள்: டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 

2027 தேசிய தின விடுமுறை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. இதனுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இணைவதால் ஆண்டின் இறுதியில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

முக்கிய அறிவிப்பு

இஸ்லாமிய நாட்காட்டி சார்ந்த பண்டிகைகளின் தேதிகள் அனைத்தும் தற்போதைய கணிப்புகளின் அடிப்படையிலானவை. ஹிஜிரி மாதப் பிறைத் தென்படுதல் மற்றும் அமீரக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ஏற்ப இந்தத் தேதிகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

TAGGED: