ஷார்ஜாவில் உணவுக் கழிவுகளை தண்ணீராக மாற்றும் ரிசார்ட்

ஷார்ஜாவில் ஒரு ரிசார்ட்டில் உணவுக் கழிவுகளைத் தண்ணீராக மாற்றும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 

ஷார்ஜாவில் அமைந்துள்ள கோரல் பீச் ரிசார்ட், உணவுக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய நீராக (Greywater) மாற்றும் பயோடைகெஸ்டர் (Biodigester) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஷார்ஜாவின் முதல் ஹோட்டல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

தோட்ட பாசனத்திற்கு மறுசுழற்சி நீர்

இயற்கை நுண்ணுயிரிகள் மற்றும் ஆக்ஸிஜனை பயன்படுத்தி, சமையலறையில் உருவாகும் இயற்கை உணவுக் கழிவுகளை இந்த Biodigester உடனடியாகச் சிதைத்து, ஊட்டச்சத்துகள் நிறைந்த மறுசுழற்சி தண்ணீராக மாற்றுகிறது.

இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், ஹோட்டலைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பசுமைப் பகுதிகளுக்கு பாசன நீராக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உணவுக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுவது குறைவதுடன், அவற்றால் உருவாகும் மீத்தேன் வாயு வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கழிவுகளை எடுத்துச் செல்லும் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வும் குறைகிறது.

இந்த முயற்சி, ஷார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் Food Waste Carbon Pilot Implementation திட்டத்தின் ஒரு பகுதியாகும். விருந்தோம்பல் துறையில் உணவுக் கழிவுகளை குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு எங்கள் கடமை

இதுகுறித்து ஹோட்டலின் ஏரியா ஜெனரல் மேலாளர் இஃப்திகார் ஹம்தானி கூறுகையில், “ஷார்ஜாவில் இந்த பயோடைகெஸ்டர் தொழில்நுட்பத்தை இயக்கும் முதல் ஹோட்டலாக எங்களது ரிசார்ட் இருப்பதில் பெருமையடைகிறேன். இது வெறும் புதிய உபகரணங்களை நிறுவுவது மட்டுமல்ல; சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும். வருங்கால தலைமுறையினருக்காக எங்கள் சுற்றுச்சூழலின் தாக்கத்தைக் குறைக்கத் தொடர் முதலீடு செய்வோம்.” என்றார்.

TAGGED: