ஷேக் அகமது மறைவு முதல் ஈரான் விமானங்களுக்கு தடை வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

ஞாயிற்றுக்கிழமையும் பாஸ்போர்ட் விநியோகம்!

அமீரகத்தில் உள்ள அனைத்து 16 இந்திய தூதரக சேவை மையங்களிலும் (ICACs) ஞாயிற்றுக்கிழமைகளில் பாஸ்போர்ட் பெறும் வசதியை அல்ஹிந்த் நிறுவனம் தொடங்கியுள்ளது. வார நாட்களில் வர முடியாதவர்களுக்காக இந்த வசதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை செயல்படும். இணையதளத்தில் தினமும் (திங்கள் முதல் சனி வரை) காலை 9:00 மணி மற்றும் இரவு 9:00 மணிக்கு முன்பதிவு நேரங்கள் (Slots) திறக்கப்படும்.

ஷேக் அகமது மறைவு

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் சகோதரரான ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த செப்.21ம் தேதி காலமானார்.  இதையொட்டி, துபாயில் செப்.21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அமீரக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

அமீரக அதிபரின் X பதிவு“அமீரகத்தின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அதன் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் சகோதரர் ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

துபாய் ஆட்சியாளரின்  X பதிவு, “என் சகோதரரே, இறைவன் உமக்கு அருள் புரிவாராக. நீ எங்கள் கண்களை விட்டு மறைந்தாலும், இதயங்களில் இருந்து என்றும் மறைய மாட்டீர்கள். இறைவன் உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் அருள்வாராக. உங்களைப் பிரிந்து வாடும் எங்களுக்கும், உங்கள் அன்பானவர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் மன அமைதியை தந்தருள்வாராக” என்று குறிப்பிட்டுள்ளார். 

துபாய் இளவரசரின் X பதிவு, “இறைவன், ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு அருள் புரிவாராக. அவர் என்றும் நமது இதயங்களிலும், நினைவுகளிலும், பிரார்த்தனைகளிலும் நிலைத்திருப்பார். இறைவன் அவருக்கு சொர்க்கத்தில் இடம் அருள்வாராக. மேலும், எங்களுக்கும் அமீரக மக்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் பொறுமையையும், மன அமைதியையும் வழங்குவாராக” என்று குறிப்பிட்டுள்ளார். 

முடிவுக்கு வந்தது கோடைகாலம்

அமீரகத்தில் செப்.23  அதிகாலை 4:05 மணிக்கு இலையுதிர்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக அமீரக வானியல் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் வெப்பநிலை 39°C – 26°C வரை பதிவாகும் என்றும், நவம்பரில் 31°C – 18°C ஆகவும், டிசம்பர் இறுதியில் 25°C – 13°C ஆகவும் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் விமானங்களுக்கு தடை

அமெரிக்கா விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, ஈரான் விமான நிறுவனங்களின் சேவைகளை அமீரகமும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதுதொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு, அமீரக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஷேக் அகமது பெயரில் காசாவிற்கு உதவி

ஷேக் அகமதுவின் நினைவைப் போற்றும் வகையில், காசா மக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான உணவுகளை தயாரித்து வழங்கப்பட உள்ளது. செப்.26 அன்று துபாய் World Trade சென்டரில் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து அனுப்பும் பணியில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: