அரசின் சேவை கட்டணங்கள் மற்றும் அபராதங்களை இனி Aani தளம் மற்றும் Jaywan கார்டு மூலம் செலுத்தலாம்.
அமீரகத்தில் அரசின் சேவைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை செலுத்த ஏற்கனவே பல்வேறு கட்டண வசதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Aani தளம் மற்றும் Jaywan கார்டு மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் தீர்மானம் எண் 176M/4M (2026)-ன் அடிப்படையில், இந்த இரண்டு புதிய கட்டண முறைகளையும் முதன்முறையாக செயல்படுத்தும் அமைச்சகமாக நிதி அமைச்சகம் உருவெடுத்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் மற்றும் அபராதங்களை விரைவாகவும் எளிதாகவும் செலுத்த முடியும். மேலும், பரிவர்த்தனைச் செலவுகள் குறைவதுடன், உயர் தரத்திலான பாதுகாப்பு மற்றும் துல்லியமான நிதி நிர்வாகமும் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aani பரிவர்த்தனை சேவை
அமீரக மத்திய வங்கி உருவாக்கியுள்ள Aani தளம், பயனர்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிமையான நிதிப் பரிவர்த்தனை வசதியை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் மொபைல் எண், எமிரேட்ஸ் ஐடி, மின்னஞ்சல் முகவரி, QR குறியீடு அல்லது IBAN எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் உடனடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
Jaywan தேசிய கார்டு திட்டம்
அமீரகத்தின் உள்நாட்டு கட்டண அட்டையான Jaywan மூலம் அரசு சார்ந்த அனைத்து சேவைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை எளிதாக செலுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், Visa மற்றும் Mastercard போன்ற சர்வதேச கார்டு சேவைகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்நாட்டு கட்டண வசதியை வழங்கவும் Jaywan அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமீரக நிதி அமைச்சகத்தின் துணைச் செயலாளர் யூனிஸ் ஹாஜி அல் கூரி கூறுகையில், “இந்த டிஜிட்டல் கட்டண முறைகள் நிதிச் சுழற்சியை சீராக்குவதுடன், பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான சேவையை வழங்கும்” என்று தெரிவித்தார்.
