இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான செய்திகள்!

இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

செவிலியர்களுக்கு கோல்டன் விசா!

துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் ஹெல்த் நிறுவனத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் உத்தரவினை வெளியிட்டார்.

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, சுகாதார சேவைகளின் மூலம் சமூகத்திற்கு அவர்கள் அளிக்கும்  முக்கிய பங்கிற்கான அங்கீகாரம் வழங்கும் விதமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்வீக மரங்களை சேதப்படுத்தினால் அபராதம்!

அபூதாபியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக அமீரகத்தை பூர்வீகமாக கொண்ட  அல் காஃப், அல் சமர் மற்றும் அல் சித்ர் (Al Ghaf, Al Samar, and Al Sidr)  ஆகிய மூன்று மரங்களை சேதப்படுத்தினால் AED 10,000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) அறிவித்துள்ளது.

மூன்று மரங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய விதியை நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை(DMT) அமல்படுத்தியுள்ளது.  இந்த மரங்கள் ஒவ்வொன்றுக்கும் கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த மரத்தை பற்றிய முழு தகவலையும் நம்மால் அறிய முடியும்.

சமீப ஆண்டுகளில், அபுதாபி கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கடல் மாசுபாடு, பல்லுயிர் சேதம் மற்றும் சட்டவிரோத மேம்பாடு தொடர்பான பெரிய மீறல்களுக்கு AED 1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

டீ-யை நிறுத்தி 1 மில்லியன் வென்ற தமிழர்!

தனது 12 நண்பர்களுடன் இணைந்து, தினமும் டீ குடிக்க செலவிடும் பணத்தை சேமித்து, லாட்டரி டிக்கெட் வாங்கி வந்த ஆனந்த் பெருமாள்சாமி என்பவர், UAE லாட்டரி மூலம்  AED 1 மில்லியன் வென்றுள்ளார்.

சிவகாசியைச் சேர்ந்த 33 வயதான ஆனந்த் பெருமாள்சாமி, துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றுகிறார். 12 நண்பர்கள் இணைந்து UAE லாட்டரிக்காக, மாதம் இருமுறை AED 8 செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.

இது குறித்து பெருமாள்சாமி “நான் மாதம் AED 16 செலவழிக்கிறேன், அது 12 முதல் 16 கப் டீ குடிப்பதற்கு சமம்” என்றார்.  இவர்கள் அர்ப்பணிப்பிற்கு பலனாக AED 1 மில்லியன் பரிசு கிடைத்தது. ஒவ்வொருவரும் AED 85,000 – 100,000 வரை பெறுவார்கள்.

GCC – USA உச்சிமாநாட்டில் அபுதாபி இளவரசர்!

வளைகுடா அமெரிக்கா இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக சவூதி அரேபியாவில் மே 14ஆம் தேதி நடைபெற்ற GCC – USA உச்சிமாநாட்டில் அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சாயித் அல் நஹ்யான் கலந்து கொண்டார். மாநாட்டின் முக்கிய நோக்கம், GCC மற்றும் அமெரிக்கா இடையிலான நட்பும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பட வேண்டும் என்பதுதான்

மேலும், மண்டல மற்றும் உலகளாவிய தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வழிகளும் ஆராயப்பட்டது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) தலைவர்களும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், அமீரக அதிபர் வழிகாட்டுதலின் பேரில் அபுதாபி இளவரசர் மாண்புமிகு காலித் பின் முகமது பின் சயீத் அவர்கள் ஐக்கிய அரபு அமீரக தூதுகுழுவிற்கு தலைமை தாங்கினார்.

அமெரிக்க அதிபர் அபுதாபி வருகை!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசு முறைப் பயணமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, அதிபர் மேன்மை தங்கிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று வரவேற்றார். அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் வதனுக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்ப்பிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெற்றது.

அரண்மனை மைதானத்திற்குள் வாகன அணிவகுப்பு நுழைந்ததும், குதிரையில் சவாரி செய்யும் காவலர், ஒட்டகங்களில் சவாரி செய்பவர்களின் ஊர்வலம் மற்றும் இந்த நிகழ்வைக் கொண்டாடும் எமிராட்டி நாட்டுப்புறக் குழுக்களின் நிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க அதிபர் வரவேற்கப்பட்டார்.


TAGGED: