உலகிலேயே முதல்முறையாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 520-க்கும் மேற்பட்ட ஹியரிங் லூப்கள் நிறுவப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தன்னுடைய மூன்று முனையங்களிலும் 520-க்கும் மேற்பட்ட ஹியரிங் லூப்கள் (Hearing Loops) எனப்படும் கேட்பதற்கு உதவக்கூடிய சாதனங்களை நிறுவியுள்ளது. உலகிலேயே எந்தவொரு விமான நிலையத்திலும், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எப்படிச் செயல்படுகிறது இந்த Hearings Loops?
இந்த தொழில்நுட்பம் செவித்திறன் குறைபாடு உள்ள பயணிகளுக்கு, குறிப்பாக ஹியரிங் எயிட்கள் அல்லது cochlear implants பயன்படுத்துபவர்களுக்கு உதவுகிறது. பயணிகள் தங்கள் சாதனங்களை ‘T’ (Telecoil) அமைப்புக்கு மாற்றுவதன் மூலம் உடனடியாக இந்த தொழிநுட்பத்துடன் இணைந்து பயன்பெற முடியும், மேலும் இதற்கு கூடுதலாக எந்த சாதனங்களும் தேவையில்லை.
எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்த ஹியரிங் லூப்கள் பயணிகள் பரவலாக தொடர்பு கொள்ளும் பல்வேறு முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன, அதாவது;
செக்-இன் கவுண்டர்கள்
பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் இடம்
விமானத்திற்காக பயணிகள் காத்திருக்கும் இடம்
தகவல் கவுண்டர்கள்
துபாய் விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி மாஜித் அல் ஜோக்கர், இதுகுறித்து கூறுகையில், இந்த முயற்சி ஒவ்வொரு பயணிக்கும், எளிதாக, மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் விமான நிலையத்தைக் கடந்து செல்லும் வாய்ப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம், எமிரேட்ஸ், ஃப்லைதுபாய், துபாய் காவல்துறை, GDRFA, சுங்கச் சாவடி, dnata, துபாய் டாக்ஸி மற்றும் துபாய் டியூட்டி ஃப்ரீ ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. பயணிகள் சேவையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களும், சிறப்புத் தேவைகள் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்கான பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
எல்லோர்க்கும் எல்லாம்
இந்த ஏற்பாடு, துபாயின் யூனிவர்சல் டிசைன் குறியீட்டின் (Universal Design Code) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளில், அனைவரும் சம அளவில் அணுகும் வசதியை உறுதி செய்கிறது.
உலகளவில், 1.5 பில்லியன் மக்கள் செவித்திறன் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். இது 2050-க்குள் 2.5 பில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதல்முறை!
இந்த ஹியரிங் லூப்கள், துபாய் விமான நிலையத்தை உலகிலேயே மிகவும் பயனுள்ள மற்றும் எல்லோருக்குமான விமான நிலையமாக மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
