பணமில்லா நகரமாக மாறப்போகும் துபாய்; எப்போது, தெரியுமா?

ஆண்டு இறுதிக்குள் துபாயில் 90% பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறும் என்று துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 

நவீனமயமாக்கலில் உலகின் முன்னோடி நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை விரிவாக பயன்படுத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, திர்ஹம் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் பயன்பாட்டை குறைத்து, பணப் பரிவர்த்தனைகளை பெருமளவில் பணமில்லா (Cashless) முறையாக மாற்றும் இலக்குடன் துபாய் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்குள் மொத்த பணப் பரிவர்த்தனைகளில் 90 சதவீதம் பணமில்லா பரிமாற்றங்களாக மாறும் என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் முன்னோடி முயற்சி 

2026ஆம் ஆண்டுக்குள் 90% டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு அக்டோபர் 9, 2024 அன்று துபாய் அதன் லட்சியமான “துபாய் பணமில்லா உத்தியை” அறிமுகப்படுத்தியது. 

இதற்காக அக்டோபர் 1, 2024 அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் “உலகின் முதல் ஐந்து பணமில்லா பரிவர்த்தனை உள்ள நகரங்களில் ஒன்றாக துபாயும் மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். மேலும் துபாய் நகர மக்களுக்கு பல்வேறு நிதி தொழில்நுட்ப சேவைகளை கிடைக்கச் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். 

பணமில்லா பரிவர்த்தனைக்கு ஒத்துழைப்பு 

பணமில்லா பரிவர்த்தனையை சாத்தியப்படுத்த துபாய் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதில் முதன்மையாக சுற்றுலா பயணிகளிடம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைடுபாய் ஆகியவை விமான நிறுவனங்கள் துபாய் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதன் மூலம் இந்த இரண்டு விமான நிறுவனங்களும் பயணிகளை டிஜிட்டல் முறையில் கட்டங்களை செலுத்துவதை ஊக்குவிப்பதோடு அதற்கான முயற்சிகளை பல்வேறு வகைகளில் எடுத்து வருகிறது.

துபாயின் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது  இயக்குநரகம்(GDRFA), துபாய் நிதித்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் விசா சேவைகளுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கட்டணங்களைச் செலுத்த முடியும். 

TAGGED: