பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அபுதாபி!
Numbeo வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 10வது ஆண்டாக அபுதாபி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த பட்டியலில் அபுதாபி (முதலிடம்) அஜ்மான் (2ஆம் இடம்), ராஸ் அல் கைமா (3ஆம் இடம்), ஷார்ஜா (5ஆம் இடம்), துபாய் (6ஆம் இடம்), புஜைரா (8ஆம் இடம்) ஆகிய ஆறு அமீரக நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
அபுதாபி காவல்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அகமது சைப் பின் சைத்தூன் அல் முஹைரி இதற்குக் காரணம் நவீன தொழில்நுட்பம் என்கிறார்.
கையெழுத்தானது அமீரகம் – இந்தியா புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
அரசுமுறை பயணமாக கடந்த ஜன.19 அன்று இந்தியா சென்ற அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருவர் முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் வகையில் புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு, அறிவியல், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் போன்றவைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் முடிவு செய்துள்ளது.
இது குறித்துப் பிரதமர் மோடி தனது ‘X’பக்கத்தில், “எனது சகோதரர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை வரவேற்க நான் விமான நிலையம் சென்றேன். இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான நட்புறவுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் காட்டுகிறது.
அவருடன் கலந்துரையாட ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமீரக அதிபருக்கு, இந்திய பிரதமர் குஜராத்தின் மர ஊஞ்சல், காஷ்மீர் பாஷ்மினா சால்வை, தெலங்கானாவின் வெள்ளிப்பெட்டி ஆகிய பாரம்பரிய பொருட்களை பரிசாக வழங்கினார்.
அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததால் அபராதம்
பொது இடத்தில் ஒருவரை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அதை ஸ்னாப்சாட்டில் பதிவிட்ட நபர், பாதிக்கப்பட்டவருக்கு AED 20,000 இழப்பீடு வழங்க அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னை ஒருவர் பொது இடத்தில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அதை ஸ்னாப்சாட்டில் பதிவிட்டதாக, பாதிக்கப்பட்டவர் AED 50,000 இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் AED 20,000 இழப்பீடு வழங்க அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஸ்னாப்சாட் கணக்கை நீக்கவும், ஆறு மாதங்களுக்கு இணைய சேவையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் (Privacy Laws), ஒருவரின் அனுமதியின்றி அவர்களைப் படம் பிடிப்பதோ அல்லது சமூக வலைதளங்களில் பரப்புவதோ பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் தவறவிட்ட 3,000 பாஸ்போர்ட்களை மீட்டுக்கொடுத்த RTA
2025ஆம் ஆண்டில் துபாய் டாக்சிகளில் பயணிகள் தவறவிட்ட AED 2 மில்லியன் ரொக்கம், சுமார் 35,000 மின்னணு சாதனங்கள் மற்றும் சுமார் 3,000 பாஸ்போர்ட்களை மீட்டு உரியவர்களிடம் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒப்படைத்துள்ளது.
துபாய் டாக்சியில் பயணிகள் தவறவிட்ட உடமைகள் புகாரின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் 56% புகார்கள் தொலைபேசி அழைப்பு வாயிலாகவும், 10.8% செயலி வாயிலாகவும் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,04,162 பொருட்கள் தொலைந்து போனதாக புகார்கள் பதிவாகியுள்ளன. புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பயணிகள் விட்டுச் சென்ற பொருட்களை நேர்மையுடன் ஒப்படைத்த டாக்ஸி ஓட்டுநர்களை RTA பாராட்டி கௌரவித்துள்ளது.
அமீரகத்தின் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு
கடந்த ஜன.22 அன்று ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் அமீரகத்தின் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகாலை 5.45 மணிக்கு 0.2ºC வெப்பநிலை பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு குளிர்காலத்திலேயே மிகக் குறைந்த அளவாக, அதிகாலை 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் கடும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அமீரகத்தில் இதே காலநிலை ஜனவரி இறுதி வரை தொடரும் என்று NCM தெரிவித்துள்ளது. அமீரக வரலாற்றிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக -5.7°C கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி ஜெபல் ஜெய்ஸ் மலையில் பதிவானது.
