கட்டுமானத் துறையில் ஒரு புரட்சி: துபாயில் உலகில் முதல்முறையாக வீடு கட்டும் ரோபோ!

துபாய் மாநகராட்சி சார்பில் எக்ஸ்போ சிட்டி வளாகத்தில் ரோபோவால் கட்டப்படும் உலகின் முதலாவது வீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போ சிட்டி வளாகத்தில் முற்றிலும் ரோபோக்களைக் கொண்டு, உலகின் முதல் குடியிருப்பு வில்லாவைக் கட்டும் திட்டத்தை துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது.

கட்டுமானத் துறையில் புதிய புரட்சி: 

இது உலகின் முதல் முயற்சியாகும். துபாய் மாநகராட்சி (Dubai Municipality) இந்த அதிரடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு 25-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்துள்ளன.

மனித உழைப்புக்கு பதிலாக, ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வீடு கட்டி முடிக்கப்படும். இதில் மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக் முறை பயன்படுத்தப்படவுள்ளது.

AI தொழில்நுட்பம்:

வரும் 2033-ஆம் ஆண்டிற்குள் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் முதலீடுகள் சுமார் 30 பில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கட்டுமான வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கு தீர்வாக ரோபோக்கள் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

70% கட்டுமானப் பணிகளை கட்டுமான இடத்திற்கு வெளியே (Off-site) தொழிற்சாலைகளிலேயே செய்து முடிக்கவும், தொழிற்சாலைகளில் 70% வேலைகளை ரோபோக்கள் மூலம் தானியங்கி முறையில் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் ரோபோக்களை பயன்படுத்துவதால் பணிகள் மிக வேகமாக நடக்கும். கட்டுமானத்தின் தரம் மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்.

துபாயின் இந்த முயற்சி, எதிர்காலத்தில் நாம் வீடு கட்டும் முறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பணியாற்றும் ரோபோ எந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமைந்த சென்சார் உள்ளது.

வீடு கட்டும் ரோபோ:

மேலும் அதில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் கட்டுமான பணிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். அதேபோல் ரோபோக்கள் துல்லியமாக அளவீடு செய்து தவறுகள் இருந்தால் தானாக சரி செய்து கொள்ளும் திறன் கொண்டவை. 

கட்டுமான பகுதிகளில் நடக்கும் விபத்துகள் இதன் மூலம் குறைக்கப்படும். அதேநேரத்தில் வேகமான கட்டுமானம், குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான கட்டுமான முறைகள் போன்றவைகள் மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும்.

துபாயில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத கட்டுமானங்கள் ரோபோ தொழில்நுட்பத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.