அமீரகத்தில் பணியாற்றும் 98% ஊழியர்கள் அதிக சம்பளத்திற்காக புதிய வேலையை தேடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதிய நிறுவனத்தில் சேர வாய்ப்பு தேடி வரும் அமீரக பணியாளர்கள்:
பல துறைகள் சார்ந்த வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் நாடாக அமீரகம் உள்ளது. இதனால் பல நாடுகளில் இருந்து பலர் அமீரகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு கணிசமான அளவு அதிக ஊதியம் என்றாலும், அத்தியாவசிய தேவைகளின் விலையேற்றம் ஊழியர்களுக்கு அதிக சம்பளத்திற்கான தேவையை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஊழியர்கள் பலர் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை விட்டு வெளியேறி புதிய நிறுவனத்தில் சேர வாய்ப்பு தேடி வருகின்றனர்.
ஊதிய உயர்வுமில்லை போனஸும் இல்லை
நடத்தப்பட்ட ஆய்வில் 2025 ஆம் ஆண்டில், 82 சதவீத ஊழியர்களுக்கு தங்களது நிறுவனங்களால் சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் 51 சதவீத ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவில்லை என்பது ஆய்வில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக துபாயை தலைமையிடமாக கொண்ட Fletcher Piccolo Associates என்ற வேலைக்கு ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அமீரகத்தில் பணியாற்றும் 98% ஊழியர்கள் 2026ஆம் ஆண்டில் அதிக சம்பளத்திற்காக புதிய வேலையை தேடுவதாக தெரிய வந்துள்ளது.
விலைவாசி உயர்வு
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமீரகத்தின் மக்கள் தொகை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை முறை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் போன்றவற்றால் ஈர்க்கப்படும் வெளிநாட்டினர் அமீரகத்திற்கு படையெடுக்கின்றனர்.
இதனால் அதிகரிக்கும் தேவை காரணமாக வீட்டு வாடகை விலை உயர தொடங்கி பொது போக்குவரத்து கட்டணங்கள் வரை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த்துக்கொள்ள அதிக ஊதியம் கிடைக்கும் வேலையை நோக்கி தள்ளப்படுகின்றனர்.
அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு சில இணையதளங்கள் பிரதானமாக உள்ளன. இதன் மூலம் நேரில் அலுவலகங்களுக்குச் செல்லாமல், போலி விளம்பரங்கள் மற்றும் போலி ஏஜென்சிகளை நம்பாமல் ஒரே கிளிக்கில் நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
