மகளின் அதிர்ஷ்டத்தால் அமீரக லாட்டரியில் AED 5 மில்லியன் வென்ற தமிழர்!

அமீரகத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்த் கோவிந்தன் அமீரக லாட்டரியில் AED 5 மில்லியன் பரிசு வென்றுள்ளார். 

AED 5 மில்லியன் வென்ற தமிழர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிகாரப்பூர்வ லாட்டரி அமைப்பான அமீரக லாட்டரியின் (UAE Lottery), ‘லக்கி டே’ (Lucky Day) குலுக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்த் கோவிந்தன் என்பவர் AED 5 மில்லியன் வென்றுள்ளார். 

முதல் முயற்சியிலேயே அதிர்ஷ்டம்:

கடந்த ஆண்டு பணிக்காக துபாய்க்கு  வந்த முருகானந்த் கோவிந்தன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதுவரை ஒருமுறை கூட லாட்டரி வாங்கியிராத இவர், தனது நண்பர் பாபு ராவ் என்பவருடன் சேர்ந்து AED 50 செலுத்தி வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே இந்த பரிசை வென்றுள்ளார்.

வாழ்க்கையை மாற்றிய எண்கள்:

தனது வெற்றி எண்களைத் தேர்வு செய்த ரகசியத்தை முருகானந்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.  லாட்டரி டிக்கெட்டில் அவர் தனது மகளின் பிறந்த வருடம் (2015): 15, தனது திருமண நிச்சயதார்த்த தேதி 7 ஆகிய எண்கள் இருக்குமாறு தேர்வு செய்துள்ளார்.  

43 ஆண்டு கால போராட்டத்திற்குப் பரிசு:

வெற்றி குறித்து முருகானந்த் கூறுகையில், “கடந்த 43 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். திருமணச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பப் பொறுப்புகள் எனத் தூக்கமில்லாத இரவுகள் பல. கடந்த மே 2025-ல் தான் வேலைக்காக துபாய் வந்தேன்.

இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். என் குழந்தைகளுக்கு ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடவுளின் ஆசீர்வாதத்தால் இப்போது அது நிறைவேறப் போகிறது,” எனத் தெரிவித்தார்.

பரிசுப் பகிர்வு:

வெற்றித் தொகையான AED  5 மில்லியனை முருகானந்தமும், அவரது நண்பர் பாபு ராவும் சமமாகப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். முன்னதாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் பொல்லா அமீரக லாட்டரியில் AED   100 மில்லியன் வென்ற  வீடியோவைப் பார்த்தே, தமக்கும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்று முருகானந்த் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

TAGGED: