வசந்தகால விடுமுறை அறிவிப்பு:
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் கல்விசார் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு மார்ச்.9 முதல் 22 வரை வசந்தகால விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சகம் & உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மீண்டும் வகுப்புகள் மார்ச் 23 முதல் தொடங்கும். மனித மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் (EHCD) ஒப்புதலுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது.
துபாய் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்
ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவுக்கு இணங்க துபாய் அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் மார்ச் 17-ம் தேதியே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பண்டிகைக் காலத்தை அனுபவிக்க உதவும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமீரகம்!
ஈரானின் தாக்குதலால் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை அமீரகம் கடந்த மார்ச் 2 அன்று மூடியது. அங்கிருந்த தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர்.
அமீரகத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை அமீரகம் மூடியது.
அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தனது உறுதியான நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் இத்தகைய செயல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதோடு, உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அமீரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கண்டனம்!
தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC), தாக்குதல்களை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டுமென என அழைப்பு விடுத்தது.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து GCC-கவுன்சில் அவசரக் கூட்டம் நடத்தி தனது நிலைப்பாட்டை வெளியிட்டது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தனது அறிக்கையில், ஈரானின் சட்டவிரோத தாக்ககுதலால் ஏற்பட்ட சேதங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தையும், பொதுமக்கள் மத்தியில் பயத்தையும் உருவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டது.
துபாய் மாலில் அதிபர் & துபாய் இளவரசர் விஜயம்!
போர் பதற்றம் நிலவும் சூழலில், கடந்த மார்ச் 2ஆம் தேதி அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் மக்களோடு மக்களாக இயல்பாய் துபாய் மாலுக்கு வருகை தந்தனர்.
மத்திய கிழக்கில் போர் நிலவும் சூழலில் இருவரும் துபாய் மாலில் சிற்றுண்டி அருந்தி, அங்கிருந்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடம் பேசினர். இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றுவது போல் அமைந்துள்ளது.
காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அதிபர்:
ஈரானின் தாக்குதலில் காயமடைந்து, அபுதாபியில் உள்ள ஷேக் ஷக்புத் மெடிக்கல் சிட்டியில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து, ஆரோக்கியத்துடன் தங்கள் குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பையும், சேவையையும் அவர் பாராட்டினார்.
ஐக்கிய அரபு அமீரகம், சூடான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் பேசிய அவர், அவர்கள் அமீரகத்தில் தங்கள் சொந்தக் குடும்பத்தினர் போலவே பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அனைத்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பும் தங்களுக்கு மிக முக்கியம் என்றும் உறுதியளித்தார்.
