ஊழியர்களுக்கு 1ஆம் தேதியே சம்பளம் வழங்க உத்தரவு
அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலேயே ஊழியர்களுக்கு முழு சம்பளம் அல்லது குறைந்தது 85% சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது. மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்கள் Wage Protection System (WPS) மூலம் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலேயே ஊழியர்களுக்கு முழு சம்பளம் அல்லது குறைந்தது 85% சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் ஊதியம் வழங்கப்படாவிட்டால், இரண்டாம் நாளிலிருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்குவார்கள். ஊதியம் வழங்காத, விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை
ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, அமீரகத்தில் தனியார் ஊழியர்களுக்கு மே 26 முதல் 29 வரை விடுமுறை. ஜூன் 1 முதல் மீண்டும் பணிகள் தொடங்கும் என மனிதவளம் மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.
முன்னதாக அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் அதா பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்றிய அமீரகம்
DMD என்ற தசைச் சிதைவு நோயால் உயிருக்கு போராடிய 10 வயது ஈராக் சிறுவனின் உலகின் விலையுயர்ந்த சிகிச்சைக்காக, அமீரகத்தில் நடத்தப்பட்ட நிதியுதவி பிரச்சாரத்தின் மூலம் AED 10.6 மில்லியன் திரட்டப்பட்டது. அதன் உதவியுடன், உயிர் காக்கும் விலையுயர்ந்த ஊசி சிறுவனுக்கு செலுத்தப்பட்டது.
யூசுப் ஹைதர் என்ற 10 வயது ஈராக் சிறுவன், Duchenne Muscular Dystrophy (DMD) எனப்படும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தான். அவனது சிகிச்சைக்காக விலையுயர்ந்த உயிர்காக்கும் ஊசி செலுத்த வேண்டியிருந்தது.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் அமீரகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றின் மூலம் “யூசுப்பை காப்பாற்றுங்கள்” என்று அவரது தந்தை பொதுமக்களிடம் உதவி கோரினார்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து, Dar Al Ber Society என்ற அறக்கட்டளை அமீரகத்தில் நிதி திரட்டும் பிரச்சாரத்தை முன்னெடுத்து AED 10.6 மில்லியன் பணத்தை திரட்ட உதவியது.
ஈராக்கிற்கு அமீரகம் கண்டனம்
ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் மூலம் பரகா அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், ஈராக் தனது அனைத்து விதமான விரோதச் செயல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 17 அன்று, ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட மூன்று டிரோன்கள் அபுதாபியில் உள்ள பராகா அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, ஈராக் தனது அனைத்து விதமான விரோதச் செயல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் அமீரகத்தின் இறையாண்மை மற்றும் வான்வெளி பாதுகாப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும், இது சர்வதேச சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு எதிரானது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Parkin & Salik கட்டணங்களுக்கு 5% VAT
ஜூன் 1 முதல் பார்க்கின் சேவைகளுக்கான பார்க்கிங் கட்டணங்கள், Salik tag கட்டணங்கள் மற்றும் சுங்கச்சாவடி கட்டணங்கள் ஆகியவற்றின் மீது 5% மதிப்புக்கூட்டப்பட்ட வரி (VAT) விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கின் நிறுவனம் வழங்கும் அனைத்து வகையான பார்க்கிங் சேவைகளுக்கும் 5% மதிப்புக்கூட்டப்பட்ட வரி (VAT) விதிக்கப்படும். சுங்கச்சாவடி கட்டணங்கள் (Toll fees) மற்றும் சாலிக் டேக் கட்டணங்கள் ஆகியவற்றின் மீதும் 5% மதிப்புக்கூட்டப்பட்ட வரி விதிக்கப்படும்.
இது 1 ஜூன் 2026 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வசூலிக்கப்படும் வரித் தொகை, அமீரகத்தின் ஃபெடரல் வரி ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
