அபுதாபியில் உள்ள இந்து கோயில் உள்பட துபாயில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயில், புனித மேரி கத்தோலிக்க தேவாலயம், குருத்வாரா குரு நானக் தர்பார் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அபுதாபி இந்து கோயில் திறப்பு;
பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்காக ஏப்ரல் 14 முதல் அபுதாபி இந்து கோயில் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வருகை தர விரும்பும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.Mandir.ae/visit என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது BAPS Mandir மொபைல் செயலி மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருத்வாரா குரு நானக் தர்பார்
தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். மாலை 5:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா கோயில்
ஏப்ரல் 11, சனிக்கிழமை முதல் வழக்கமான தரிசன சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சமூக மேம்பாட்டு ஆணையம் (CDA) வழிகாட்டுதல்களின்படி, படிப்படியாகப் பக்தர்களின் வருகையை அனுமதிப்பதன் மூலம் வழிபாட்டுத் தலங்களுக்கான அணுகலை மீண்டும் வழங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புனித மேரி கத்தோலிக்க தேவாலயம்
இந்த தேவாலயம் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டுமே வார இறுதி திருப்பலிகளில் பங்கேற்க முடியும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
தேவாலயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தேவாலயத்தின் உட்புறம் உள்ள முக்கிய ஹால்கள் (Main Church, Bishop Gremoli Hall போன்றவை) மட்டுமே வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும். வெளிப்புறக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
இடம் கிடைக்காதவர்கள் ஆன்லைன் நேரலை மூலம் வழிபாட்டில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, துபாய் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த மாற்றங்களைச் செய்துள்ளன. பக்தர்கள் நெரிசலைத் தவிர்க்கவும், அவசர காலங்களில் தன்னார்வலர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
