ஹோர்முஸ் நீர்ச்சந்தி கடல்வழியைத் தவிர்த்து, புஜைரா வழியாக எண்ணெய் கொண்டு செல்ல, அமீரகம் அமைத்து வரும் 2-வது மாற்று எண்ணெய் குழாய் திட்டப்பணிகள் தற்போது 50% நிறைவடைந்துள்ளன. 2027-க்குள் முழுப்பணிகளும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது மாற்று எண்ணெய் குழாய் திட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) கடந்து செல்லாமல் மாற்றுப் பாதையில் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான தனது இரண்டாவது குழாய் (Pipeline) திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் தீவிரப்படுத்தியுள்ளது.
அட்னாக் (Adnoc) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமீரக அமைச்சருமான சுல்தான் அகமது அல் ஜாபர், இத்திட்டம் தற்போது 50% நிறைவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், 2025-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, 2027-ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மாற்றுப் பாதை:
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழியான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விலை 40% வரை உயர்ந்துள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க,ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து, இந்தியப் பெருங்கடலில் உள்ள புஜைரா துறைமுகம் வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அமீரகம் இந்த உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது.
இந்தப் புதிய குழாய் விநியோகத் திட்டம் அபுதாபியின் எண்ணெய் ஏற்றுமதித் திறனை கணிசமாக அதிகரிக்கும். மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் உடனே முடிவுக்கு வந்தால் கூட, எண்ணெய் விநியோகம் 80% இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது 4 மாதங்கள் ஆகும்.
முழுமையான மீட்சிக்கு 2027-ஆம் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் காலாண்டு வரை ஆகலாம் எனவும் அட்னாக் நிறுவனத்தின் தலைமை சுல்தான் அகமது அல் ஜாபர் தெரிவித்துள்ளார்.
