ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட்டின் வரலாறு; ஒரு அசோசியேட் நாட்டின் அசாத்திய எழுச்சி!

ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பும், பிரம்மாண்டமான விளையாட்டு மைதானங்களும் தான் நம் நினைவுக்கு வரும். இன்று சர்வதேச கிரிக்கெட்டின் முக்கிய அசோசியேட் நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமீரகத்தின் கிரிக்கெட் பயணம், வெறும் ஒரு சில தசாப்தங்களில் உருவானது அல்ல. அதற்கு ஒரு நீண்ட சுவாரசியமான வரலாறு உண்டு.

அமீரகம் உருவாகும் முன்பே கிரிக்கெட் கிளப்!

அமீரகத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது. 1892-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, நாட்டிலுள்ள ராணுவ தளங்களில் பிரிட்டிஷ் வீரர்களால் முதன்முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1969-ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களால் Darjeeling CC என்ற கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் 1971-ஆம் ஆண்டு உருவாகும் முன்பே, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கிளப் நிறுவப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் கனவுகளுக்கு களம் அமைத்த ஷார்ஜா

1970-களில் அமீரக கிரிக்கெட்டின் முகமே மாறியது. பாகிஸ்தானின் கராச்சியில் கல்வி பயின்றபோது கிரிக்கெட்டின் மீது ஆர்வம் வளர்த்த எமிராட்டி தொழிலதிபர் அப்துல் ரஹ்மான் புக்காதிர், 1974-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் Bukhatir League என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரை தொடங்கினார். இந்த தொடர், வேலைவாய்ப்புக்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு வந்திருந்த கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த களமாக அமைந்தது.

1981ஆம் ஆண்டு ஷார்ஜாவில் புல்வெளியுடன் கூடிய புதிய சர்வதேச மைதானம் திறக்கப்பட்டு, சுனில் கவாஸ்கர் XI மற்றும் ஜாவேத் மியான்டட் XI அணிகளுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி 8,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்றது. 

அதன்பிறகு 1984ஆம் ஆண்டு ஷார்ஜா மைதானத்தில் முதல் அதிகாரப்பூர்வ ஒருநாள் சர்வதேசப் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. உலகிலேயே அதிக ஒருநாள் போட்டிகளை நடத்திய மைதானம் என்ற உலக சாதனை இன்று வரை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திடமே உள்ளது.

சர்வதேச அங்கீகாரமும் உலகக் கோப்பை பயணமும்

1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமீரக கிரிக்கெட் வாரியம் (ECB), அதே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இணை உறுப்பினராக அங்கீகாரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சுல்தான் ஜாரவானி தலைமையிலான அமீரக அணி, 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற ICC Trophy தொடரின் இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி, முதல் முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மேலும், 1996 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை அமீரகம் பதிவு செய்தது. இதன்பிறகு சில ஆண்டுகள் சரிவை சந்தித்த அமீரக அணி, குர்ரம் கான் தலைமையில் மீண்டும் எழுச்சி பெற்று, 2014 டி20 உலகக் கோப்பை மற்றும் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய தொடர்களுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

அமீரக கிரிக்கெட்டின் புதிய யுகம்!

2016-ஆம் ஆண்டு அமீரக கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு மத்திய ஒப்பந்த (Central Contract) முறையை அறிமுகப்படுத்தி, அவர்களை தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கும் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டது. 

இதனைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு உலகின் முதல் T10 League தொடரை அறிமுகப்படுத்திய அமீரக கிரிக்கெட் வாரியம், பின்னர் தனது சொந்த பிரான்சைஸ் அடிப்படையிலான ILT20 (International League T20) தொடரையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. 

இன்று சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அசோசியேட் நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமீரகம், திறமையான இளம் வீரர்களை உருவாக்கி, எதிர்காலத்தில் முழுநேர டெஸ்ட் அந்தஸ்து பெறும் இலக்குடன் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

உலக கிரிக்கெட்டின் தலைநகரமாக மாறிய UAE 

2005-ஆம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது தலைமையகத்தை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலிருந்து துபாய்க்கு மாற்றியது. இதன் மூலம், அமீரகம் உலக கிரிக்கெட்டின் முக்கிய நிர்வாக மையமாக உயர்ந்தது. பாதுகாப்பு காரணங்களால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்காலிக தாயகமாக அமீரகம் சுமார் ஒரு தசாப்த காலம் செயல்பட்டது. 

மேலும், இந்தியாவின் பொதுத் தேர்தல் மற்றும் கோவிட்-19 காலகட்டங்களில் IPL தொடரின் பல போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான நம்பகமான மையமாக அமீரகம் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

TAGGED: