அமீரகத்தில் பாஸ்போர்ட், விசா சேவைகளை நேரில் பெற முன்பதிவு அவசியம்; புதிய இணையதளம் அறிமுகம்!

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணை தூதரகத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை நேரில் பெற ஜூலை 6 முதல்  இணையதளத்தில் முன்பதிவு செய்து வர வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்பதிவிற்கு இணையதளம்  (Appointment Portal)

அமீரகத்தில் சுமார் 43 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாஸ்போர்ட் புதுப்பித்தல், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும் சேவைகளை இந்திய தூதரகத்தின் அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

ஜூலை 1, 2026 முதல் அமீரகத்தில் பாஸ்போர்ட், விசா சேவைகளை  ‘அல்ஹிந்த் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக இந்தியாவில் சில சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்டதால், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள துணை தூதரகமும் தங்களது அலுவலகங்களில் இந்த சேவைகளை தற்காலிகமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 

நேரில் அதிகப்படியானோர் வருவதை தவிர்க்க அபுதாபி, துபாய் இந்திய தூதரகங்களில் பாஸ்போர்ட், விசா சேவையைப் பெற ஜூலை 6, 2026 முதல் முன்பதிவு செய்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூதரகத்தின் வலியுறுத்தல்கள் 

இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றொப்ப சேவைகளுக்கு முன்பதிவு செய்ய book.passportindiauae.com

என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்தவர்கள் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சேவைகளைப் பெறலாம்.
 முன்பதிவு செய்தவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விண்ணப்பதாரர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார். விண்ணப்பதாரர் குழந்தையாக இருந்தால், பெற்றோர் இருவரும் உடன் செல்ல வேண்டும். 


அபுதாபி தூதரகத்தின் முதன்மை வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். சந்தேகங்கள் மற்றும் ஆவண விநியோகம் தொடர்பான விவரங்களுக்கு  Guardian Tower-ல் உள்ள கன்சுலர் பிரிவை அணுகலாம்.

துபாயில் உள்ள துணை தூதரகத்தின் பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்கு நுழைவுவாயில்  எண் 2 வழியாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு (Attestation) மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்த சேவைகளுக்கு நுழைவுவாயில் எண் 1 வழியாகவும் செல்ல வேண்டும்.

டோக்கன் இல்லாத (Walk-in) சேவைகள் குறைப்பு

முன்னறிவிப்பு இன்றி நேரடியாகச் சென்று சேவை பெறும் (Walk-in) நேரம் தற்போது குறைக்கப்பட்டு, காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவசரச் சான்றிதழ்கள் (Emergency Certificates) தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை வழங்கப்படும். மற்றவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்

 தூதரகத்திற்கு வரும்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.

பாஸ்போர்ட் படிவத்தை mportal.passportindia.gov.in/mission/ என்ற இணையதளத்தில் கவனமாகப் பூர்த்தி செய்து, வெள்ளை பின்னணியில் (White background) எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் கட்டண முறை ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டணங்கள் ரொக்கமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், சரியான சில்லறையைக் கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

அழைப்பு எண் (Toll-free): 800 46342 (800 INDIA)

வாட்ஸ்அப் (WhatsApp): +971 54 309 0571

மின்னஞ்சல் (Email): pbsk.dubai@mea.gov.in