இலவச ராட்சத சறுக்கு விளையாட்டு
துபாயின் Mercato Mall-ல் உள்ள புகழ்பெற்ற இலவச ராட்சத சறுக்கு விளையாட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 12:45 வரையும், பிற்பகல் 2:00 மணி முதல் 4:45 வரையும், மாலை 6:00 மணி முதல் 7:45 வரையும் திறக்கப்பட்டிருக்கும்.
120 செ.மீ.க்கும் குறைவான உயரமுள்ள குழந்தைகள், பெரியவர் ஒருவருடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இருவரின் மொத்த எடை 85 கிலோகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ADCB வங்கி சேவை சீரமைப்பு
ADCB மொபைல் செயலி தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் செயல்படுகிறது. இன்னும் செயலியில் சிக்கல் உள்ளவர்கள், தற்காலிகமாக Internet Banking-ஐ பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
ADCB வங்கியின் தொழில்நுட்பக் கோளாறு தற்போது பெரும்பாலும் சரிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சில வாடிக்கையாளர்களுக்கு மொபைல் வங்கி செயலியில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களின் பணம், கணக்கு இருப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் பாதிக்கப்படவில்லை என வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. சில வாடிக்கையாளர்கள் மட்டும் Internet Banking அல்லது வங்கி கிளைகள் மூலம் சேவைகளைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிய குர்ஆன் குரல்களுக்கான தேடல்
துபாய் ஆட்சியாளர், உலகிலேயே மிக அழகிய குரலில் குர்ஆன் ஓதுபவர்களைக் கண்டறிந்து கௌரவிக்கும் “துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது” போட்டிக்கான புதிய பதிப்பை அறிவித்துள்ளார்.
உலகெங்கிலும் இனிமையான குரலில் புனித குர்ஆன் ஓதுபவர்களைக் கண்டறிந்து அவர்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்படும் துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது போட்டியின் புதிய பதிப்பை துபாய் ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X பதிவில், “அல்லாஹ்வின் அருளாலும் வழிகாட்டுதலாலும், இன்று துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருதின் புதிய பதிப்பை தொடங்கி வைக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார். வரும் புனித ரமலான் மாதத்தில் இதன் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு
தொற்றுநோயால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என அமீரகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்திற்கு Federal National Council ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தொற்றுநோய் அல்லது பெருந்தொற்று காலத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரக்கூடாது. அதே நேரத்தில், அவர்கள் பணிக்கு வராத காலத்திற்காக சம்பளம், ஊதியம் அல்லது விடுப்பு உரிமைகளில் எந்தக் குறைப்பும் செய்யப்படாது என புதிய சட்டத் திருத்தத்திற்கு அமீரகத்தின் Federal National Council ஒப்புதல் அளித்துள்ளது.
FNC சபாநாயகர் சக்ர் கோபாஷ் தலைமையில் நடைபெற்ற, 18வது சட்டமன்றக் காலத்தின் மூன்றாவது அமர்வின் 13வது கவுன்சில் கூட்டத்தின்போது இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊழியர்கள் புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம்!
துபாயில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை DubaiNow செயலியில் Worker’s Voice என்ற சேவை மூலமாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் டிஜிட்டல் அமைப்பும், துபாய் காவல்துறை இணைந்து இந்த செயலியில் ” Worker’s Voice” என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளனர்.
இதில் சம்பளப் பாக்கி, மோசமான தங்குமிடம், வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது இதர பணிச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தனி நபராகவோ அல்லது குழுவாகவோ புகார் அளிக்கலாம்.
ஊழியர்கள் இனி இதற்காக அரசு சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மொபைல் மூலமாக இருந்த இடத்திலிருந்தே புகாரை சமர்ப்பிக்க முடியும். ‘DubaiNow’ செயலி மூலம் 35-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளின் 250-க்கும் அதிகமான சேவைகளை மக்கள் பெற முடியும்.
