அமீரகத்தில் பணிபுரியும் தகுதியான மற்றும் திறமையான பணியாளர்களுக்கு (Skilled Workers) ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது அமீரகத்தின் “கிரீன் விசா” (Green Visa). ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த விசா முறை, கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
உங்களுடைய தற்போதைய பணி விசாவை விட கூடுதல் சுதந்திரத்தையும் சலுகைகளையும் வழங்கும் இந்த கிரீன் விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது? அதன் நன்மைகள், தகுதிகள் மற்றும் கட்டண விவரங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கிரீன் விசாவின் முக்கிய நன்மைகள்
- இந்த விசா 5 ஆண்டுகள் செல்லுபடியாகும், மேலும் இதனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
- முதல் நிலை உறவினர்களை (மனைவி/கணவன் மற்றும் பிள்ளைகள்) ஸ்பான்சர் செய்து அமீரகத்திற்கு அழைத்து வரலாம்.
- விசா ரத்து செய்யப்பட்டாலும், நாட்டை விட்டு வெளியேற அல்லது வேறு விசா பெற 6 மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும்.
விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?
திறமையான பணியாளர் (Skilled Worker) பிரிவில் விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
- மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) வழங்கிய பணி அனுமதி (Work Permit) வைத்திருக்க வேண்டும். அல்லது அரசு, அரசு-தனியார் கூட்டு நிறுவனம் மற்றும் ஃப்ரீ ஜோன் (Free Zone) நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சக வகைப்பாட்டின்படி லெவல் 1, 2 அல்லது 3-க்குள் உங்கள் பணி வகை வர வேண்டும்.
- குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும்.
- உங்கள் மாதச் சம்பளம் குறைந்தபட்சம் AED 15,000-ஆக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்.
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- MOHRE வழங்கிய பணி அனுமதி (Work Permit).
- வேலை ஒப்பந்தப் பத்திரம் (Employment Contract).
- சம்பளச் சான்றிதழ் (Salary Certificate) அல்லது வங்கி கணக்கு அறிக்கை (Bank Statement).
- விண்ணப்பதாரரின் நிலையைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை
துபாயில் உள்ளவர்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
நேரடியாக ஆமர் சென்டர் (Amer Centre) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அல்லது, GDRFA Dubai (General Directorate of Residency and Foreigners Affairs) இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரங்கள்
விசா விண்ணப்பக் கட்டணம்: AED 200 (கூடுதலாக 5% VAT வரி).
நீங்கள் ஏற்கனவே அமீரகத்திற்குள் இருந்தால் (In-country application):
In-country கட்டணம்: AED 500
Knowledge Dirham: AED 10
Innovation Dirham: AED 10
விண்ணப்பதாரரின் சூழ்நிலையைப் பொறுத்து இறுதிக் கட்டணம் சற்று மாறுபடலாம்.
