வாழ்வாதாரத்தைத் தேடியும், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
ஆனால், அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களில், கடந்த 2023 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள மத்திய அரசின் புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) தரவுகளின்படி, இயற்கை மரணங்கள், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் விபத்துகள், தற்கொலைகள், குற்றச் செயல்கள் மற்றும் இதர காரணங்களால் 145 நாடுகளைச் சேர்ந்த இந்தியர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில் வேலை பார்த்த 800-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியிடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான இந்தியர்கள் பணிபுரிவதால், அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்த மரணங்களில் 55% அரபு நாடுகளில் நிகழ்ந்துள்ளன. இதில் சவுதி அரேபியாவில் அதிகபட்சமாக 182 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 128 பேர் இறந்துள்ளனர்.
| நாடு | இயற்கை மரணம் | பணியிட விபத்து | தற்கொலை | குற்றம் | இதர | மொத்த மரணங்கள் |
| சவூதி அரேபியா | 6,376 | 182 | 354 | 29 | 1,040 | 7,981 |
| ஐக்கிய அரபு அமீரகம் | 5,702 | 128 | 511 | 25 | 1,092 | 7,458 |
| குவைத் | 1,672 | 62 | 162 | 10 | 285 | 2,191 |
| ஓமன் | 1,092 | 38 | 146 | 0 | 222 | 1,498 |
| கத்தார் | 783 | 23 | 66 | 0 | 102 | 974 |
| பஹ்ரைன் | 703 | 10 | 101 | 2 | 43 | 859 |
