புர்ஜ் கலீஃபாவின் ‘At the Top’ பார்வையாளர் அனுபவத்திற்கான டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துபாய்க்கு சுற்றுலா வர திட்டமிடும் இந்தியப் பயணிகள், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் ‘At the Top’ நுழைவுச் சீட்டுகளை இனி UPI மூலம் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் பயணிகள் அமீரகத்திற்கு வருவதற்கு முன்பாகவே தங்களின் பயணத் திட்டங்களை மிக எளிதாக அமைக்க முடியும்.
இந்த UPI கட்டண வசதி NEOPAY, இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் சர்வதேசப் பிரிவான NIPL (NPCI International Payments Limited) மற்றும் Emaar Entertainment ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
UPI-ஐ ஏற்கும் முதல் அமீரக சுற்றுலாத்தலம்
அமீரகத்தில் ஆன்லைன் கட்டணத்திற்காக UPI வசதியை ஏற்கும் முதல் சுற்றுலாத் தளமாக புர்ஜ் கலீஃபாவின் ‘At the Top’ உருவெடுத்துள்ளது. இதன் மூலம், இந்தியப் பயணிகள் அமீரகத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே, புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களுக்குப் பிடித்தமான UPI செயலியைப் பயன்படுத்தி எளிதாகக் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து NEOPAY நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விபூர் முண்டாடா கூறுகையில், “இந்தியாவின் மிகவும் நம்பகமான கட்டண முறையை உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபாவின் ‘At the Top’ அனுபவத்துடன் இணைப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகும். மேலும், GCC பிராந்தியத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்காக UPI வசதியை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக NEOPAY திகழ்வதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
ஈமார் என்டர்டெயின்மென்ட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “புர்ஜ் கலீஃபாவுக்கு வரும் சர்வதேச பயணிகளில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் UPI கட்டண வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் பயண அனுபவம் மேலும் எளிமையாகவும் வசதியாகவும் அமையும்” என்றார்.
