புகழ்பெற்ற ‘துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2026′ வரும் அக்டோபர் 31 முதல் தொடங்குகிறது.
துபாயை உலகின் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான நகரங்களில் ஒன்றாக மாற்றும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2026’ நிகழ்வின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துபாய் இளவரசரும், அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் 2017ஆம் ஆண்டு இந்த முயற்சி முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
அக். 31 முதல் நவ. 29 வரை ஃபிட்னஸ் கொண்டாட்டம்
இந்த ஆண்டுக்கான துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 29ஆம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் துபாயில் வசிப்பவர்களும், சுற்றுலாப் பயணிகளும் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, நகரம் முழுவதும் நடைபெறும் இந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இயக்கத்தில் பங்கேற்கலாம்.
துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் துபாய் விளையாட்டு கவுன்சில் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆண்டு நிகழ்விலும், மக்களின் வரவேற்பைப் பெற்ற Dubai Run, Dubai Ride, Dubai Stand Up Paddle மற்றும் Dubai Yoga உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இதுமட்டுமின்றி, நகரம் முழுவதும் ஃபிட்னஸ் கிராமங்கள், ஃபிட்னஸ் மையங்கள் அமைக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
