Museum of Future; செப்.1 முதல் தற்காலிகமாக மூடல்!

துபாயின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘Museum of Future’  வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 2027-ஆம் ஆண்டு வரவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் 5-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய மற்றும் அடுத்த கட்ட அதிநவீன தொழில்நுட்ப அனுபவங்களை (Next-Generation Experiences) உருவாக்குவதற்காக இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

பொதுமக்களின் யோசனைகளுடன் புதிய மாற்றம்:

இது குறித்து அருங்காட்சியக நிர்வாகம் வெளியிட்ட தகவலில், சமூக வலைதளங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து பெறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட புதுமையான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய காட்சிகள் மற்றும் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“கடந்த காலத்தைப் பதிவு செய்யும் வழக்கமான அருங்காட்சியகங்களைப் போலன்றி, இந்த அருங்காட்சியகம் அறிவியல் மற்றும் புதுமை நுட்பங்களின் மூலம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் வகையில் செயல்படுகிறது” என அருங்காட்சியகத்தின் தலைவர் முகமது அல் கெர்காவி தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்களுக்கு கடைசி வாய்ப்பு:

தற்போது உள்ள காட்சிகளைப் பார்வையிட விரும்பும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 1 முதல் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டு, 2027-ன் முதல் காலாண்டில் புதிய பொலிவுடன் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்.  கூடுதல் விவரங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.