UAE-யில் வேலை செய்கிறீர்களா? இந்த 11 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

தொழிலாளர்கள் சந்திக்கும் 11 வகையான விதிமீறல்கள் குறித்து MOHRE செயலி, வலைத்தளம் அல்லது 80084 என்ற இலவச எண் மூலம் எளிதாகப் புகார் அளித்து, சட்டப்பூர்வமான தீர்வைப் பெறலாம்.

அமீரகத்தில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் 11 வகையான அத்துமீறல்கள் குறித்து மனித வளங்கள் மற்றும் எமிரடைசேஷன் அமைச்சகத்திடம் (MOHRE) நேரடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைச் சுமூகமாகத் தீர்க்க முடியாத பட்சத்தில், அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் புகார் அளித்து, உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

புகாரளிக்கக்கூடிய 11 வகையான விதிமீறல்கள்

1. Fake Emiratisation: பணியிடங்களில் அமீரகக் குடிமக்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசின் ‘சுதேசிமயமாக்கல்’ (Emiratisation) கொள்கையில் முறைகேடு செய்வது. 

2. Forced labour and human trafficking: தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி அல்லது மிரட்டி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது மற்றும் மனித கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது.

3. Non-compliance with Emiratisation requirements: தனியார் துறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமீரகக் குடிமக்களை வேலையில் சேர்க்க வேண்டும் என்ற அரசின் கட்டாய விதியை நிறுவனங்கள் நிறைவேற்றாமல் இருப்பது.

4. Sexual harassment: வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களாலோ அல்லது உயரதிகாரிகளாலோ பாலியல் ரீதியான தொல்லைகள், தவறான செய்கைகள் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு ஆளாக்கப்படுவது.

5. Failure to pay end-of-service benefits: ஒருவர் வேலையை விட்டு விலகும்போது அல்லது நிறுவனத்தால் நீக்கப்படும்போது, அவருக்குச் சட்டப்படி சேர வேண்டிய பணிக்கால முடிவுச் சலுகைகளான (Gratuity) மற்றும் நிலுவைச் சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றுவது.

6. Requiring employees to work more than two hours of overtime: ஒரு தொழிலாளியை அவரது வழக்கமான வேலை நேரத்தைத் தாண்டி, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 2 மணிநேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் (Overtime) வேலை செய்ய கட்டாயப்படுத்துவது.

7. Violations of the Occupational Heat Stress Prevention Policy: கோடைக்காலத்தில் அதிக வெயிலின் தாக்கம் மற்றும் வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு அறிவித்துள்ள நண்பகல் நேர ஓய்வு (Midday Wor) மற்றும் பாதுகாப்பு விதிகளை நிறுவனங்கள் பின்பற்றத் தவறுவது.

8. Non-compliance with labour accommodation standards: நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் தங்குமிடங்களில் போதிய காற்றோட்டம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் சட்டப்பூர்வத் தரத்தின்படி தராமல் முறையற்ற முறையில் தங்க வைப்பது.

9. Presence of an illegal worker: விசா இல்லாமல், காலாவதியான விசாவில் அல்லது தேவையான வேலை அனுமதி (Work Permit) இல்லாமல் ஒருவரை நிறுவனத்தில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தி வேலை வாங்குவது.

10. Violations of occupational health and safety requirements: வேலை செய்யும் இடத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் இருப்பது, ஆபத்தான இயந்திரங்கள் உள்ள இடங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவது மற்றும் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவது.

11. Failure to grant annual leave, provide leave encashment, or carry forward leave balances: தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாகச் சேர வேண்டிய வருடாந்திர விடுமுறையை (Annual Leave) வழங்க மறுப்பது, பயன்படுத்தாத விடுமுறை நாட்களுக்குப் பதிலாகத் தர வேண்டிய பணத்தைச் (Leave Encashment) செலுத்தத் தவறுவது அல்லது மீதமுள்ள விடுப்பு இருப்பை அடுத்த ஆண்டுக்கு மாற்ற (Carry Forward) அனுமதிக்காமல் ஏமாற்றுவது.

எதில் புகார் அளிப்பது?

செயலி: MOHRE UAE 

இணையதளம்: MOHRE அதிகாரப்பூர்வ வலைத்தளம். 

தொலைபேசி எண்: தொழிலாளர் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்கான மையத்தின் (Labour Claims and Advisory Centre) 80084 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

TAGGED: