ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி விமான நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று வரிப் பணத்தை (VAT Refund) திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. இதற்காக ‘Planet‘ என்ற புதிய செயலியை கூட்டாட்சி வரி ஆணையம் (FTA) அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் அதிவேக வரி ரீஃபண்ட் சேவையாகக் கருதப்படும் இந்த புதிய வசதி, Planet Tax Free நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த விமான நிலையங்களில் கிடைக்கிறது?
தற்போது இந்த புதிய சேவை பின்வரும் மூன்று முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது:
- துபாய் சர்வதேச விமான நிலையம் (Dubai International Airport)
- சயீத் சர்வதேச விமான நிலையம், அபுதாபி (Zayed International Airport)
- ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் (Sharjah International Airport)
- செயலியில் பதிவு செய்தல்: பயணிகள் Planet செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களது முகத்தை ஸ்கேன் செய்தும், பாஸ்போர்ட் மற்றும் வங்கி கார்டு விவரங்களைப் பதிவேற்றியும் கணக்கைத் தொடங்க வேண்டும்.
- QR code ஸ்கேன் செய்தல்: விமான நிலையத்தைச் சென்றடைந்ததும், வரி ரீஃபண்ட் மையங்களில் உள்ள திரைகளில் தோன்றும் QR code ஐ செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்த உடனேயே ரீஃபண்ட் செயல்முறை தொடங்கிவிடும்.
- தானியங்கி சரிபார்ப்பு (AI & Smart Gates): செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், வாங்கிய பொருட்களுக்கு நேரடிப் பரிசோதனை தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்:
- நேரடிப் பரிசோதனை தேவையில்லை எனில்: பயணிகள் எந்த அதிகாரியையும் நேரில் சந்திக்கத் தேவையில்லை. செயலி மூலமாகவே சில நிமிடங்களில் 5% VAT தொகை நேரடியாகப் பயனரின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
- பரிசோதனை தேவைப்பட்டால்: செயலியில் இருந்து அறிவிப்பு வரும். பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ‘Smart Gates’ பகுதிக்குச் சென்றால் போதும். அங்கே முகத்தை ஸ்கேன் செய்து தானியங்கி முறையில் சரிபார்ப்பு உடனடியாக முடிவடையும்.
டிஜிட்டல் அமீரகம்:
அமீரக அரசின் Digital Zero Bureaucracy Programme மற்றும் AI தொழில்நுட்ப விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
