துபாய் Museum of the Future-ல் கல்வித் தகுதியைவிட தனித்திறமைக்கு முன்னுரிமை அளித்து ‘Future Perfects’ பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘Museum of the Future’, பார்வையாளர்களுக்குப் புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில், “Future Perfects” என்ற புதிய பணிக்காக விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் தேர்வாகும் நபர்கள், அருங்காட்சியகத்தின் புதிய முகங்களாகச் செயல்படுவார்கள்.
பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு 2027-ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகம், கற்பனைத்திறன், ஆர்வம், Emotional Intelligence, சிறந்த தகவல் தொடர்பு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களைத் தேர்வு செய்ய இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
திறமைக்கே முன்னுரிமை
இந்த ஆட்சேர்ப்பில் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தை விட, ஒருவரின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் நற்குணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வழக்கமான நேர்காணல்களுக்குப் பதிலாக, நேரடிச் சோதனைகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் நடத்தும் இறுதித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
“Future Perfects” பணியில் தேர்வாகும் நபர்கள், வழிகாட்டிகளாகவும் கதைசொல்லிகளாகவும் செயல்படுவார்கள். அனைத்து வயதினர் மற்றும் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட பார்வையாளர்களை அன்புடன் வரவேற்று, அறிவியல் மற்றும் எதிர்காலம் தொடர்பான சிக்கலான கருத்துகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குவதே இவர்களின் முக்கியப் பணியாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
பேச்சுத்திறன், கவனிக்கும் ஆற்றல் மற்றும் எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்கும் தன்னம்பிக்கை உள்ள எவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அருங்காட்சியகங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவையில் முந்தைய பணி அனுபவம் கட்டாயமில்லை.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 2026 நவம்பர் முதல் அருங்காட்சியகத்தின் Visitor Experience Team-ல் முழு நேரப் பணியாளர்களாக இணைவார்கள். அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த எதிர்கால யோசனைகளைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமான அனுபவமாக இவர்கள் மாற்றுவார்கள்.
இது குறித்து ‘Museum of the Future’ அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஸ்ஸா அல் நுஐமி கூறுகையில், “தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் மனிதனின் ஆர்வம், கற்பனைத்திறன் மற்றும் சக மனிதர்களுடனான இணைப்பு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை ஒரு பட்டப் படிப்போ அல்லது பணி அனுபவமோ தீர்மானிப்பதில்லை. வழக்கமான பாதைகளுக்கு அப்பால் இருக்கும் ஆற்றலை அங்கீகரிக்கும் துபாயின் நம்பிக்கையையே “Future Perfects” பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.
விண்ணப்பிக்கும் முறை
- கடைசி தேதி: 8 நவம்பர் 2026
- விண்ணப்பிக்கும் தளம்: futureperfects.museumofthefuture.ae
இணையவழி விண்ணப்பம், நேரடி மதிப்பீடுகள் மற்றும் இறுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர்களைப் பொதுமக்கள் மியூசியத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகப் பரிந்துரையும் செய்யலாம்.
