பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் வகையில், மூன்று நாடுகளும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே தொடர் பதற்றம் நிலவி வரும் சூழலில், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ (Makkah Joint Defence Agreement) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் கையெழுத்தானது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் இதில் கூட்டாகக் கையொப்பமிட்டனர்.
மும்முனை பலம்
கடந்த ஆண்டு சவூதி – பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது துருக்கியின் இணைவால் முத்தரப்புப் பாதுகாப்பு அமைப்பாக விரிவடைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் பொருளாதார வலிமை, துருக்கியின் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பம், பாகிஸ்தானின் அணுஆயுதத் திறன் இவை மூன்றும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சக்திவாய்ந்த பிராந்தியக் கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள மிக முக்கியமான விதிப்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் என்ற என்ற நேட்டோ (NATO) பாணியிலான பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது.
ஒரு நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது மற்ற இரு நாடுகளும் தங்களது ராணுவ பலத்தைப் பயன்படுத்திப் பதிலடி கொடுக்கவோ அல்லது உடனடியாக உதவவோ முன்வரும்.
முக்கியப் பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகள்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று நாடுகளும் பின்வரும் துறைகளில் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
- மூன்று நாடுகளின் படைகளும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
- பிராந்திய அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.
- பாதுகாப்புத் துறை சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பகிர்வது.
- ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுத உற்பத்தியை மேம்படுத்துதல்.
