மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ரத்து முதல் வெயில் படிப்படியாகக் குறையும் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

RAK – Dubai; கூடுதல் பேருந்து சேவை 

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) ராஸ் அல் கைமா மற்றும் துபாய் இடையேயான பேருந்து சேவைகளை 19 ஆக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தப் புதிய அட்டவணை மூலம், பயணிகள் அதிகாலையிலேயே பயணம் செய்யவும், இரவு நேரங்களில் துபாயிலிருந்து திரும்பி வரவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

அமீரகத்தில் வெயில் படிப்படியாகக் குறையும் 

அமீரகத்தில் கோடை காலத்தின் உக்கிரம் படிப்படியாகக் குறைந்து, மிதமான வானிலை தொடங்குவதைக் குறிக்கும் ‘Suhail’ பருவம் ஆகஸ்ட் 24 அன்று தொடங்கியது. இருப்பினும், செப்டம்பர் இறுதி வரை வெப்பமும் அதிக ஈரப்பதமும் தொடர்ந்து நிலவும் என  எமிரேட்ஸ் வானியல் சங்க தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். 

KG – 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ரத்து!

2026-27 கல்வியாண்டு முதல், அமீரகம் முழுவதும் KG முதல் 2-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கப்படாது என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. சிறிய குழந்தைகளுக்குப் போதிய ஓய்வு, விளையாட்டு, குடும்பத்துடனான நேரம் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைத்து, வகுப்பறையிலேயே கற்றலை முழுமைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.. 

Museum of the Future செப்.1 முதல் மூடல் 

துபாயின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘Museum of Future’  வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 2027-ஆம் ஆண்டு வரவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் 5-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய மற்றும் அடுத்த கட்ட அதிநவீன தொழில்நுட்ப அனுபவங்களை (Next-Generation Experiences) உருவாக்குவதற்காக இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

செப்டம்பர் 1 முதல் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டு, 2027-ன் முதல் காலாண்டில் புதிய பொலிவுடன் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்.  கூடுதல் விவரங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  

கோர் ஃபக்கான் 4 மாவட்டங்களாக பிரிப்பு

கோர்ஃபக்கான் நகரத்தை நான்கு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்க ஷார்ஜா ஆட்சியாளர் மாண்புமிகு  டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, கோர்ஃபக்கான் சிட்டி, அல் அவாய்நாத், அல் சயாஹ் மற்றும் அல் சபிஹியா என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படவுள்ளது.

TAGGED: