தாய்மார்களுக்கு மகுடம்: துபாயில் Housewife என்பது Generation Shaper என மாற்றம்!

அன்னையர் தினத்தை முன்னிட்டு துபாய் இளவரசர் இல்லத்தரசிகளுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், அரசு ஆவணங்களில் “Housewife” என்பதற்கு பதிலாக Generation Shaper என்ற சொல்லைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அமீரகத் தலைவர்கள்  அமீரக அதிபர், துபாய் ஆட்சியாளர்  மற்றும்  துபாய் இளவரசர் வாழ்த்து தெரிவித்தனர். 

துபாய் இளவரசர்  மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல்  மக்தூம் அவர்கள்  அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு மிகச்சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்ததியை செதுக்குபவர் 

அரசு ஆவணங்களிலும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் (Community Development Authority) நடைமுறைகளிலும் ‘Housewife’ (இல்லத்தரசி) என்ற சொல்லுக்குப் பதிலாக ‘Generations Shaper’ (சந்ததியை பண்படுத்துபவர்) என்ற புதிய பெயரைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஏன் இந்த மாற்றம்?

இந்த மாற்றத்திற்கான காரணங்களாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

  • நாட்டின் அடித்தளம்: தாய்மார்கள் ஒரு குடும்பத்தின் அடித்தளம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மற்றும் நாட்டின் வலிமையான எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்.
  • முதல் பள்ளி: குழந்தைகளுக்குப் பொறுப்புணர்வு, நற்பண்புகள் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றைச் சொல்லிக்கொடுக்கும் ‘முதல் பள்ளி’ தாய்தான்.
  • கௌரவம்: ஒரு தாய் தன் குழந்தைகளை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறையையே செதுக்குகிறார். அந்த உன்னதமான பணியைக் கௌரவிக்கவே இந்த ‘தலைமுறைகளை உருவாக்குபவர்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அவரது வாழ்த்துச் செய்தி

மேலும் தனது வாழ்த்துப் பதிவில், “அனைத்து தாய்மார்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள்தான் உலகில் உள்ள அனைத்து நன்மைகளுக்கும் அஸ்திவாரம். அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.