அமீரக அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி முதல் விமானத்தில் வேலைவாய்ப்பு வரை – அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி

சில தினங்களுக்கு முன் அமீரகத்திற்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமீரக அதிபர் மற்றும் துபாய் இளவரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இரு நாடுகளுக்கிடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களை (CEPA) மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்தியர்களின் நலனை உறுதி செய்ததற்காக பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துகளை ஜெய்சங்கர், அமீரக அதிபரிடம் தெரிவித்தார்.

புர்ஜ் அல் அரப் தற்காலிகமாக மூடல்

துபாயின் அடையாளமான புர்ஜ் அல் அரப் ஹோட்டல், 1999ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு முதன்முறையாக புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகள் 18 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிப்பு பணிகள் வழக்கம் போல் செயல்பட்டாலும் விருந்தினர்களுக்கு பாதிப்பின்றி பல கட்டங்களாக பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE லாட்டரியின் முதல் கடை 

இதுவரை ஆன்லைனில் மட்டுமே செயல்பட்டு வந்த அமீரக லாட்டரி, தற்போது தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை அபுதாபியின் முசாஃபா பகுதியில் தொடங்கியுள்ளது. லாட்டரியில் புதியவர்களுக்கு, அங்குள்ள ஊழியர்கள் விளையாடும் முறை மற்றும் விதிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கின்றனர். இந்த விற்பனை மையம் வண்ணமயமாகவும் நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திரைகள் மற்றும் தெளிவான அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் ஏப்.20 முதல் தொடக்கம்

அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் நர்சரிகள், மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஏப்.20 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் தேவைப்பட்டால் ‘ஹைப்ரிட்’ முறையை (நேரடி வகுப்பு + ஆன்லைன் வகுப்பு) பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி அவசியம்.

இந்தியாவுக்கு சொகுசா பயணிக்கலாம்! 

அபுதாபியில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில், எதிஹாட் நிறுவனம் மே 1 முதல் தினசரி இருமுறை A321LR வகை விமானங்களை இயக்கவுள்ளது. இந்த விமானங்களில் பிசினஸ் கிளாஸ் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் சாய்ந்து படுக்கும் வசதி கொண்ட பிசினஸ் கிளாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விமானங்களில் அதிநவீன First Class வசதிகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வேலைவாய்ப்பு 

துபாயை தலைமையிடமாக கொண்ட flydubai விமான நிறுவனத்தில் Cabin Crew பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அடிப்படை ஊதியமாக AED 8,275 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உடல் உயரம் குறைந்தது 158 செ.மீ இருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதிகளாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 24 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க: https://careers.flydubai.com/cabin-crew

TAGGED: