அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலேயே ஊழியர்களுக்கு முழு சம்பளம் அல்லது குறைந்தது 85% சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.
15 நாட்கள் அவகாசம் ரத்து:
இதுவரை தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க 15 நாட்கள் வரை அவகாசம் (Grace period) இருந்தது. ஆனால், ஜூன் 1 முதல் இந்த 15 நாட்கள் அவகாசம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
புதிய விதிகள் மற்றும் அபராதங்கள்:
மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள புதிய தீர்மானத்தின்படி, சம்பளம் தாமதமானால் பின்வரும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்:
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 1-ஆம் தேதியன்றே சம்பளத்தை வழங்கிட வேண்டும். (WPS – Wage Protection System மூலமாக இது கண்காணிக்கப்படும்).
1-ஆம் தேதி சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு அமைச்சகத்திடம் இருந்து எச்சரிக்கை அறிவிப்புகள் (Notifications) அனுப்பப்படும்.
5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்காவிட்டால், அந்த நிறுவனம் புதிய ஊழியர்களுக்கு பணி அனுமதி வழங்கிட (New work permits) தடை விதிக்கப்படும்.
சம்பளத் தாமதம் 11 நாட்கள் வரை நீடித்தால், அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, நிறுவனம் கருப்புப் பட்டியலில் (Blacklisted) சேர்க்கப்படும்.
இந்த நாட்களையும் தாண்டி சம்பளம் வழங்கப்படாமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர்கள் அல்லது முதலாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் மற்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி பயணத் தடையும் (Travel ban) விதிக்கப்படும்.
விதிவிலக்கு (சம்பள பிடித்தம்):
ஒரு ஊழியருக்கு சட்டப்பூர்வமான பிடித்தங்கள் (Lawful deductions) போக, அவருடைய மொத்த சம்பளத்தில் குறைந்தது 85 சதவீதமாவது அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே, அந்த மாத சம்பளம் வெற்றிகரமாக வழங்கப்பட்டதாக அமைச்சகத்தால் கருதப்படும்.
