மே 15ஆம் தேதி அமீரகத்திற்கு வந்த இந்திய பிரதமர் மோடி, அமீரக அதிபருக்கு ‘Tree of Life’ உருவம் பொறிக்கப்பட்ட ரோகன் ஓவியம், GI-Tag பெற்ற கேசர் மாம்பழங்கள் மற்றும் மேகாலயா அன்னாசிப்பழங்களை பரிசாக வழங்கினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வாரகாலம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதில் முதல் நாடாக மே 15ஆம் தேதி மோடி அமீரகத்திற்கு வருகை புரிந்தார். சில மணி நேரங்கள் மட்டுமே மோடி அமீரகத்தில் இருந்த நிலையிலும், அப்போது இந்தியா மற்றும் அமீரகம் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு, இந்திய பிரதமர் மோடி ‘Tree of Life’ உருவம் பொறிக்கப்பட்ட ரோகன் ஓவியம், புவிசார் குறியீடு பெற்ற கேசர் மாம்பழங்கள் மற்றும் மேகாலயா அன்னாசிப்பழங்களை பரிசாக வழங்கினார்.
மோடி வழங்கிய பரிசு பொருட்களின் சிறப்பம்சங்கள்
ரோகன் ஓவியம்
ரோகன் ஓவியம் குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்த ஒரு அரிய, நேர்த்தியான ஜவுளி கலை வடிவமாகும். இது அதன் சிக்கலான கைவினைத்திறன் மற்றும் துடிப்பான அழகியல் பாரம்பரியத்திற்காகக் கொண்டாடப்படுகிறது. ரோகன் கலையில் உள்ள Tree of Life என்ற வடிவம் வலிமை, புதுப்பித்தல் மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாகும்.
கேசர் மாம்பழங்கள்
புவிசார் குறியீடு பெற்ற கேசர் மாம்பழம், குஜராத்தின் “மாம்பழங்களின் ராணி” என்றும் அழைக்கப்படுகிறது. இது குஜராத்தின் ஜூனாகத் பகுதியை தாயகமாகக் கொண்டது. குங்குமப்பூ நிறம் கொண்ட, நார் இல்லாத சதைப்பற்று மற்றும் தீவிர நறுமணத்தால் வேறுபடும் இந்த மாம்பழம், குஜராத்திய விருந்தோம்பலின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகிறது.
மேகாலய அன்னாசிப்பழம்
புவிசார் குறியீடு பெற்ற மேகாலய அன்னாசிப்பழங்கள், உலகின் மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் தூய்மையான மலைப்பாங்கான பகுதிகளில் செழித்து வளரும் இந்த அன்னாசிப்பழங்கள், அதிக சர்க்கரைச் சத்து மற்றும் குறைந்த அமிலத்தன்மைக்காக பிரபலமானவை. மேலும், இவை தனித்துவமான இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்டதாக அறியப்படுகின்றன.
