துபாயில் இந்தியரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை

துபாயில் கப்பல் வணிக நிறுவன உரிமையாளர் ஒருவர் தவறவிட்ட AED 100,000 பணத்தைக் கண்டெடுத்த இந்தியர் ஒருவர், அதனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து தனது நேர்மையை நிலைநாட்டியுள்ளார்.

ஒரு பார்க்கிங் பகுதியில் கண்டெடுத்த AED 100,000 பணத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்த முஹம்மது அலி ஷெரக்கல் மோஹி என்ற இந்தியரை, துபாயில் உள்ள அல் ரஃபா காவல் நிலைய அதிகாரிகள் கௌரவித்துள்ளனர். பணம் தொலைந்தது கூடத் தெரியாமல் இருந்த அதன் உரிமையாளரிடம், வெறும் மூன்று மணி நேரத்திற்குள் அந்த பணம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

பணம் தொலைந்தது எப்படி?

கப்பல் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், வங்கியில் இருந்து AED 2,00,000 பணத்தை எடுத்து ஒரு காகித உறையில் வைத்திருந்தார். பின்னர் அந்த உறையை சரியாக மூடாமல் அவசரமாக தனது காரை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, AED 1,00,000 பணம் அடங்கிய ஒரு கட்டு கீழே விழுந்தது. ஆனால் அதை கவனிக்காத அவர், காரில் ஏறி அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு, அந்த பார்க்கிங் பகுதிக்கு வந்த மோஹி, அங்கே பணம் கிடப்பதை கண்டு வியப்படைந்தார். அவர் அந்த பணத்தையும், அது கிடந்த இடத்தையும் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் உடனடியாக அல் ரஃபா காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை ஒப்படைத்ததுடன், அது கண்டெடுக்கப்பட்ட துல்லியமான இடத்தையும் போலீசாரிடம் காண்பித்தார்.

வெறும் மூன்று மணி நேரம் 

அல் ரஃபா காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கி, மூன்று மணி நேரத்திற்குள் பணத்தின் உரிமையாளரை கண்டறிந்தனர். காவல் நிலையத்திலிருந்து அவரை தொடர்புகொண்டபோது, தனக்கே தெரியாமல் பணத்தை தவறவிட்டதை அறிந்து அவர் ஆச்சரியமடைந்தார். பின்னர் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து தனது பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

பணத்தை மீட்டுக் கொடுத்த இளைஞருக்கும் துபாய் காவல்துறைக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட உரிமையாளர், துபாயின் அசாத்திய பாதுகாப்பை வெகுவாகப் பாராட்டினார்.

TAGGED: