துபாயில் புதிய தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை (DET) ‘SME in a Box’ என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய் உலகளாவிய வணிக மையமாக தன் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) விரைவாகவும், குறைந்த செலவிலும் தொடங்குவதற்கென ஒரு புதிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை (DET) அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் தளம் ‘SME in a Box’ என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் தனியார் துறையைச் சேர்ந்த 18 முக்கிய நிறுவனங்களின் ஆதரவோடு செயல்படத் தொடங்கியுள்ளது.
ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும்
புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் பல்வேறு துறைகளை தனித்தனியாக அணுகும் நிர்வாக சுமையை குறைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கமாகும். வணிக உரிமம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் கட்டண முறைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு போன்ற வணிகத்திற்க்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் இந்த ஒரே தளம் வழங்குகிறது.
இது குறித்துப் பேசிய முகமது பின் ரஷித் சிறு மற்றும் நடுத்தர நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் ரூம் அல் மெய்ரி, “துபாயின் துடிப்பான பொருளாதாரத்தின் முதுகெலும்பாக SMEs திகழ்கின்றன. தொழில் முனைவோர் சந்திக்கும் பொதுவான சவால்களான வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொழில் முனைவோருக்கான முக்கியப் பலன்கள்
AED 80,000 வரை சேமிப்பு: இந்தத் தளத்தின் மூலம் இணையும் நிறுவனங்களுக்குக் கட்டண விலக்குகள், தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக சேவை தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நிறுவனத்திற்கு சராசரியாக AED 80,000-க்கு மேல் செலவுகள் மிச்சமாகும்.
200 மணி நேரங்கள் மிச்சம்: பொதுவாக பல்வேறு சேவை வழங்குநர்களை பற்றி தேடவும், அவர்களின் சலுகைகளை ஒப்பிடவும், பதிவுகளை முடிக்கவும் மாதக்கணக்கில் நாட்களாகும். ஆனால், இத்தளம் மூலம் தொழில்முனைவோரின் 200 மணிநேர வேலை நேரம் சேமிக்கப்படும்.
‘D33’ மாபெரும் இலக்கு
துபாயின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கவும், 2033-க்குள் உலகின் டாப் 3 நகரங்களில் ஒன்றாக துபாயை மாற்றவும் இலக்கு வைத்துள்ள ‘D33’ (Dubai Economic Agenda) பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாய், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக தொடக்கங்களுக்கான மிகச் சிறந்த இடமாக மீண்டும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
