துபாயில் மெட்ரோ, பேருந்து, டாக்ஸி மற்றும் ட்ராம் போன்ற பொதுப் போக்குவரத்தை எளிதாக பயன்படுத்த உதவும் Nol Card பற்றிய முழுமையான வழிகாட்டி இது. இது துபாயில் வசிப்பவர்களுக்கும், சுற்றுலா வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தொகுப்பு.
துபாய் போன்ற உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் பயணம் செய்வது மிகவும் எளிதானது. அதற்கு மிக முக்கியமான காரணம் இங்குள்ள பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு ஆகும். துபாயில் வசிப்பவர்களுக்கும், இங்கு சுற்றுலா வருபவர்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒரு பொருள் தான் Nol Card.
Nol Card என்றால் என்ன?
நோல் கார்டு என்பது துபாயின் பொதுப் போக்குவரத்தில் கட்டணம் செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட் கார்டு ஆகும். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) இது வழங்கப்படுகிறது. இக்கார்டில் நாம் பணத்தை ரீசார்ஜ் செய்து கொண்டு, துபாயின் மெட்ரோ, அரசு பேருந்துகள், அரசு டாக்ஸிகள், ட்ராம், வாட்டர் டாக்ஸி மற்றும் பொதுப் பார்க்கிங் கட்டணங்களைச் செலுத்த எளிதாக பயன்படுத்தலாம்.
நோல் கார்டுகளின் வகைகள் மற்றும் அவற்றின் விலைகள்
பயணிகளின் தேவைக்கேற்ப நோல் கார்டுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- Silver Card:
யாருக்கு ஏற்றது: துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தினசரி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.
விலை: AED 25
காலாவதி காலம்: 5 ஆண்டுகள்
- Gold Card:
இந்த கார்டை வைத்திருப்பவர்கள் துபாய் மெட்ரோவின் சொகுசான Gold Class பெட்டிகளில் பயணிக்கலாம்.
விலை: AED 25
காலாவதி காலம்: 5 ஆண்டுகள்
- Red Ticket:
துபாய்க்கு சுற்றுலா வருபவர்கள் அல்லது எப்போதாவது ஒருமுறை மட்டும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கான காகித டிக்கெட் இதுவாகும்.
விலை: AED 2
- Blue Card:
மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணச் சலுகைகளை பெற இக்கார்டு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
விலை: AED 70
நோல் கார்டை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?
Silver, Gold, Blue Cards: இந்த கார்டுகளை மெட்ரோ, பேருந்து, டாக்ஸி, ட்ராம், வாட்டர் டாக்ஸி ஆகியவற்றில் மட்டுமல்லாமல், துபாயில் உள்ள சில முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் நிலையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பாம் ஜுமேராவில் உள்ள மோனோரெயில் ஆகியவற்றிலும் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.
Red Ticket: இதனை மெட்ரோ, பேருந்து, டாக்ஸி மற்றும் ட்ராம் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிற இடங்களுக்கு பயன்படுத்த முடியாது.
நோல் கார்டை எங்கு வாங்கலாம்?
- Metro station ticket offices
- Dubai International Airport
- RTA Customer Happiness Centres
- Nol Pay
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ரீசார்ஜ் செய்வது எப்படி?
- RTA Dubai App அல்லது nol Pay App மூலம் மொபைலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்.
- RTA அதிகாரப்பூர்வ இணையதளம் (RTA Website) வழியாகவும் செய்யலாம்.
- மெட்ரோ நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அல்லது டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஒரு கார்டை இருவர் பயன்படுத்தலாமா?
சில்வர் மற்றும் கோல்ட் கார்டுகளை ஒரு நபர் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ‘ரெட் கார்டை மட்டும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம்.
கார்டில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு?
துபாய் மெட்ரோ, பேருந்து அல்லது டிராமில் உங்கள் பயணத்தை தொடங்குவதற்கு, உங்கள் நோல் கார்டில் குறைந்தபட்சம் AED 7.50 இருப்புத்தொகை இருக்க வேண்டும். உங்களிடம் AED 7.50-க்கு குறைவாக இருந்தால், நிலையத்திற்குள் செல்ல உங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது?
- உங்களிடம் தனிப்பயனாக்கப்பட்ட புளூ கார்டு இருந்தால், அது தொலைந்து போகும் பட்சத்தில் உடனே அதை பிளாக் செய்துவிட்டு, புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
- சில்வர் மற்றும் கோல்ட் கார்டுகள் பொதுவாக உங்களுடைய எமிரேட்ஸ் ஐடியுடன் லிங்க் செய்யப்படாததால், அவை தொலைந்து போனால் அதிலுள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
