அதிதி என்ற இந்தியப் பெண் ‘Win Your Home in Dubai’ திட்டத்தின் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்து ஒரு புதிய ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை பரிசாக வென்றுள்ளார்.
வீடு வென்ற இந்தியப் பெண்:
துபாயில் 12 ஆண்டுகளாக வசித்து வரும் அதிதி என்ற இந்தியப் பெண், “Win Your Home in Dubai’ என்ற திட்டத்தின் கீழ் அல் பர்ஷா பகுதியில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கியதன் மூலம், அதிர்ஷ்டக் குலுக்கல் (Draw) முறையில் ஒரு புதிய ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை பரிசாக வென்றுள்ளார்.
துபாயில் நிதித்துறையில் (Finance Sector) பணிபுரியும் அதிதி, தனது கணவர் மற்றும் மகளுடன் பொருட்கள் வாங்கச் சென்ற போது இந்த குலுக்கலில் பங்கேற்றுள்ளார். துபாயில் தங்களுக்கு என ஒரு சொந்த வீடு கிடைத்ததை எண்ணி அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த திட்டத்தை துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனம் (DFRE – Dubai Festivals and Retail Establishment) மற்றும் துபாய் சேம்பர்ஸ் (Dubai Champers)ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதன் மூலம் ‘பிங்காட்டி டெவலப்பர்ஸ்’ (Binghatti Developers) கட்டிய 12 குடியிருப்பு வீடுகள் பொதுமக்களுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளன.
அடுத்தடுத்த குலுக்கல்கள்:
ஜூலை 12, 19, 26 மற்றும் ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ‘துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் அடுத்தடுத்த குலுக்கல்கள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட் பரிசாக வழங்கப்படும். ஆகஸ்ட் 30-ல் நடக்கும் இறுதி குலுக்கலில் மெகா பரிசாக 2-BHK அப்பார்ட்மெண்ட் வழங்கப்பட உள்ளது.
குலுக்கலில் பங்கேற்பது எப்படி?
ஆகஸ்ட் 30 வரை இந்த வாய்ப்பு உள்ளது. துபாயில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட கடைகளில், பங்கேற்கும் 1,000-க்கும் அதிகமான பிராண்டுகளில் குறைந்தபட்சம் AED 500 மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்கலாம். பொருட்கள் வாங்கியதற்கான ரசீதை (Receipt), அங்கிருக்கும் அதிகாரப்பூர்வ QR கோடை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதன் மூலம் இந்த குலுக்கலில் இணைந்து கொள்ளலாம்.
