துபாயின் புகழ்பெற்ற Palm Monorail, ஆறு மாத பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் தனது சேவையை தொடங்கியுள்ளது.
நிலையம் மற்றும் வழித்தட பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் இந்த மோனோரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயண வழித்தடம்
5.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில், தொடக்க நிலையமான Gateway Station-லிருந்து இறுதி நிலையமான Atlantis Aquaventure Station-ஐ வெறும் 9 நிமிடங்களில் சென்றடையலாம். அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையேயான பயண நேரம் சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இந்த ரயில் சேவை Golden Mile Galleria, Al Ittihad Park மற்றும் Palm Jumeirah Mall உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக இயங்குகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும்.
புறப்படும் நேரம்
- Gateway Station: காலை 9:00 மணிக்கு முதல் ரயிலும், இரவு 9:45 மணிக்கு கடைசி ரயிலும் புறப்படும்.
- Atlantis Aquaventure: காலை 9:15 மணிக்கு முதல் ரயிலும், இரவு 10:00 மணிக்கு கடைசி ரயிலும் புறப்படும்.
பயணக் கட்டணம்
One-Way பயணம் ஒரு நபருக்கு AED 10 ஆகவும், Return Ticket ஒரு நபருக்கு AED 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், Family Pass மற்றும் Unlimited Travel Pass வசதிகளும் பயணிகளுக்காக வழங்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மோனோரெயிலின் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
