ஒரு நாட்டின் வரலாற்றை அறிய அதன் கட்டிடங்களை மட்டும் பார்த்தால் போதாது; அதன் கலை, இசை, கவிதை மற்றும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், அமீரகத்தின் கலை மரபு பல நூற்றாண்டுகளைக் கடந்த பெருமையை கொண்டுள்ளது.
பண்டைய காலங்களில் அமீரக மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கவிதை, இசை, நடனம், மண்பாண்டக் கலை, நெசவு மற்றும் எம்பிராய்டரி போன்ற கலை வடிவங்கள் பின்னிப்பிணைந்திருந்தன. இன்றும் அவை அமீரகத்தின் அடையாளமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கவிதை – மக்களின் மொழியில் பிறந்த இலக்கியம்
அமீரக இலக்கிய மரபில் மிகவும் பிரபலமானது நபதி (Nabati) கவிதை. அரபு தீபகற்பத்தில் பல நூற்றாண்டுகளாக மக்களின் உணர்வுகள், வீர வரலாறு, காதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை எளிய பேச்சு வழக்கில் வெளிப்படுத்தும் கவிதை வடிவமாக இது விளங்குகிறது.
அதேபோல் அல் தக்ரூதா (Al-Taghrooda) என்ற கவிதை மரபும் தனித்துவமானது. ஒட்டகங்கள் அல்லது குதிரைகளுடன் பயணம் செய்யும் போது இருவர் மாறி மாறி பாடும் இந்தக் கவிதை, பின்னர் திருமணங்கள் மற்றும் விழாக்களிலும் இடம் பெற்றது.
இசையும் நடனமும் – ஒற்றுமையின் அடையாளம்
அமீரகத்தின் பாரம்பரிய நடனங்களில் மிகவும் பிரபலமானது அல் அய்யாலா (Al Ayyala). இரண்டு வரிசைகளாக நின்று, மூங்கில் குச்சிகளை ஏந்தியபடி தாளத்தின் இசையோடு ஆடும் இந்த நடனம் ஒற்றுமை, மற்றும் சமூக ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.
ராஸ் அல் கைமாவில் மட்டும் காணப்படும் அல் வஹபிய்யா (Al Wahabiyyah) என்ற கலை வடிவமும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கைவினைக் கலை – தலைமுறைகள் காத்த செல்வம்
மண்பாண்டக் கலை, நெசவு, எம்பிராய்டரி போன்ற கைவினைப் பொருட்கள் அமீரக மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக அல் சாது (Al Sadu) என்ற பாரம்பரிய நெசவுக் கலை, யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நவீன கலையின் புதிய முகம்
இன்று அமீரகம், பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய கலை மற்றும் இலக்கிய மையமாகவும் வளர்ந்து வருகிறது. அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் Art Dubai, Abu Dhabi Art, Sharjah Biennale, Sharjah International Book Fair போன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதிலுமிருந்து கலைஞர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் ஈர்த்து வருகின்றன.
பாரம்பரியத்தையும் புதுமையையும் சமமாக மதித்து வளர்த்து வரும் அமீரகம், கலைக்கும் கலாச்சாரத்திற்கும் உலக அரங்கில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
