அமீரகத்தின் 5 ஆண்டுகால multiple-entry சுற்றுலா விசாவிற்கு, அமீரகத்தில் இருக்கும் ஒருவரோ அல்லது நிறுவனமோ Sponsor செய்ய அவசியம் இல்லை என துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDFRA) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியா உள்பட உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்பான்சர் தேவையில்லை:
இந்த விசாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தனிநபரோ அல்லது நிறுவனமோ உங்களுக்கு ஸ்பான்சராக (Sponsor/Host) இருக்க வேண்டிய அவசியமில்லை.
5 ஆண்டுகள் செல்லுபடியாகும்:
விசா வழங்கப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இது செல்லுபடியாகும். இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அமீரகத்திற்குள் சென்று வரலாம் (Multiple entries).
தங்கும் காலம்:
ஒரு முறை நாட்டிற்குள் நுழைந்தால் 90 நாட்கள் வரை தங்கலாம்.
தேவைப்பட்டால், மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். மொத்தமாக 180 நாட்கள் வரை தங்கலாம்.
ஆனால், ஒரு ஆண்டில் ஒட்டுமொத்தமாக தங்கும் நாட்கள் 180 நாட்களைத் தாண்டக்கூடாது.
விண்ணப்பிப்பதற்கு தேவையானவை
பாஸ்போர்ட்: குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் காலம் இருக்க வேண்டும்.
புகைப்படம்: சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
மருத்துவக் காப்பீடு (Health Insurance): அமீரகத்தில் செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீட்டுக்கான ஆதாரம்.
பயணச்சீட்டு: வந்து செல்வதற்கான இருவழி விமான டிக்கெட் (Round-trip ticket).
வங்கி கணக்கு அறிக்கை (Bank Statement): கடந்த 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை.
முக்கிய நிபந்தனை: விண்ணப்பிப்பதற்கு முந்தைய 6 மாதங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் $4,000 டாலர் அல்லது அதற்கு இணையான தொகை தொடர்ந்து பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
அமீரகத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்கள் (Official Websites), ஸ்மார்ட் செயலிகள் (Smart Apps), கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் அல்லது அமர் சேவை மையங்கள் (Amer Service Centres) மூலமாக 24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தேவையான சேவையைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கட்டணம் மற்றும் விதிகள் (Fees & Rules)
விசா கட்டணம், சேவை கட்டணம் மற்றும் திரும்பப் பெறக்கூடிய பிணைப்புத் தொகை (Refundable financial guarantee) உட்பட தோராயமாக AED 3,713 ஆகும். விண்ணப்பதாரரின் சூழ்நிலையைப் பொறுத்து இதில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.
நீங்கள் தங்கும் நாட்களைச் சரியாகக் கண்காணிப்பது உங்கள் பொறுப்பாகும். அபராதங்களைத் தவிர்க்க உங்களது பயணப் பதிவுகளை (Travel movement report) ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
யாருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்?
அடிக்கடி அமீரகம் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள தங்களது குடும்பத்தினரை அடிக்கடி பார்க்கச் செல்பவர்கள் மற்றும் தொழில்முறைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த விசா சிறந்த வசதியை வழங்குகிறது.
