UAE-யின் முதல் உள்நாட்டு வங்கி கார்டு ‘Jaywan’ அறிமுகம்… தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் முறையில் முக்கியமான மாற்றம் ஏற்படவுள்ளது. இதுவரை Visa மற்றும் Mastercard போன்ற சர்வதேச கட்டண நெட்வொர்க்குகளை அதிகம் சார்ந்திருந்த UAE, தற்போது ‘Jaywan’ என்ற தனது முதல் உள்நாட்டு (Domestic) கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் புதிய டெபிட் கார்டு அறிமுகம் மட்டுமல்ல. நாட்டின் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பரிவர்த்தனைகளை உள்ளூரிலேயே செயல்படுத்தவும், வெளிநாட்டு கட்டண நெட்வொர்க்குகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக  மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை.

Jaywan என்றால் என்ன?

Jaywan என்பது UAE Central Bank-இன் துணை நிறுவனமான Al Etihad Payments உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கார்டு கட்டண அமைப்பாகும்.

இதுவரை அமீரகத்தில் பெரும்பாலான கார்டு பரிவர்த்தனைகள் சர்வதேச நெட்வொர்க்குகள் மூலம் செயல்படுத்தப்பட்டன. Jaywan அறிமுகத்தின் மூலம், உள்நாட்டு பரிவர்த்தனைகளை UAE-க்குள்ளேயே செயல்படுத்தும் புதிய அமைப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் பரிவர்த்தனைத் தரவுகளும் நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும்.

ஏன் இந்த மாற்றம்?

உலகின் பல நாடுகள் தங்களுக்கென சொந்த கட்டண அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவின் RuPay, சவுதி அரேபியாவின் mada, சீனாவின் UnionPay போன்றவற்றின் வரிசையில் தற்போது அமீரகமும் Jaywan மூலம் இணைந்துள்ளது.

இதன் முக்கிய நோக்கம், நாட்டின் கட்டண அமைப்பில் அதிக தன்னிறைவை உருவாக்குவதும், உள்நாட்டு பரிவர்த்தனைகளை வேகமாகவும் குறைந்த செலவிலும் செயல்படுத்துவதுமாகும்.

UAE குடியிருப்பாளர்களுக்கு என்ன பயன்?

  • வங்கி கட்டணங்கள் குறைய வாய்ப்பு

உள்நாட்டு கட்டண அமைப்பு என்பதால், எதிர்காலத்தில் குறைந்த கட்டணத்தில் டெபிட் கார்டுகள் மற்றும் வங்கி சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், சர்வதேச கட்டண நெட்வொர்க்குகளுக்கு செலுத்தப்படும் பரிவர்த்தனை கட்டணங்கள் குறைவதால், வணிக நிறுவனங்களின் செலவும் குறையலாம்.

  • பரிவர்த்தனைத் தரவுகள் UAE-க்குள்ளேயே

Jaywan மூலம் நடைபெறும் கட்டணத் தகவல்கள் அனைத்தும் அமீராகத்திலேயே பாதுகாப்பாக செயலாக்கப்பட்டு சேமிக்கப்படும். இது நாட்டின் டிஜிட்டல் நிதி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

  • வேகமான பரிவர்த்தனைகள்

UAESWITCH என்ற உள்ளூர் பேமண்ட் மெத்தேட் மூலம் உள்நாட்டு பரிவர்த்தனைகள் வேகமாக நடைபெறும் வகையில் Jaywan வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • தற்போது எந்த வங்கிகள் வழங்குகின்றன?

Jaywan கார்டுகள் தற்போது கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை,

First Abu Dhabi Bank (FAB) – Jaywan Debit Card

Commercial Bank of Dubai (CBD) – Jaywan Prepaid Card

ஆகியவை வழங்கத் தொடங்கியுள்ளன.

மேலும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விரைவில் இந்த சேவையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jaywan கார்டின் வகைகள்

தற்போது மூன்று வகையான Jaywan கார்டுகள் வழங்கப்படுகின்றன.

  • Jaywan Prestige Debit Card
  • Jaywan Royal Debit Card
  • Jaywan Prepaid Card

Prestige மற்றும் Royal கார்டுகளுக்கு பயணம், ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங், கார் வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Prepaid Card-ஆனது செலவுகளைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் மற்றும் தினசரி செலவுகளை நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

கடைகளில் நேரடியாக பணம் செலுத்தலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்.

ATM-களில் பணம் எடுக்கலாம்.

ஆதரவு இருக்கும் சில டிஜிட்டல் வாலெட்களில் பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளில் பயன்படுத்த முடியுமா என்பது, அந்த கார்டை வழங்கும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும்.

இந்தியாவின் RuPay உடன் உள்ள தொடர்பு

Jaywan உருவாக்கத்தில் இந்தியாவின் NPCI International Payments Limited (NIPL) தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இந்தியாவின் RuPay கட்டண அமைப்பின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அமீராகத்திற்கே உரிய உள்நாட்டு கட்டண நெட்வொர்க்காக Jaywan உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் என்ன மாற்றம்?

Jaywan என்பது ஒரு புதிய கார்டு சேவை மட்டுமல்ல; அமீரகம் தனது நிதி உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும். வரும் மாதங்களில் மேலும் பல வங்கிகள் இந்த சேவையில் இணைய வாய்ப்புள்ளதால், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதிய பேமண்ட் விருப்பமாக Jaywan மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: