அபுதாபியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளது. Healthy Living Programme-ன் ஒரு பகுதியாக, கடையின் நுழைவாயில், பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும் வரிசைகளின் (Aisle) முனைகள் மற்றும் பில் செலுத்தும் கவுண்டர்கள் போன்ற அதிக மக்கள் வரும் பகுதிகளில் இருந்து ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்களை படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
எந்தெந்த பொருட்கள் அகற்றப்படுகின்றன?
சாக்லேட், சிப்ஸ், இனிப்பு வகைகள், சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள், திடீரென வாங்கத் தூண்டும் (Impulse Buying) இடங்களில் இருந்து படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. அபுதாபியில் உள்ள சில Carrefour கிளைகளில் இந்த மாற்றம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும்போது, பில் போடும் இடத்தில் காத்திருக்கும்போது அல்லது கடைக்குள் நுழைந்தவுடன் கண்ணில் படும் பொருட்களை, யோசிக்காமல் வாங்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஸ்நாக்ஸ் கேட்டு வாங்குவது வழக்கம்.
இந்த தேவையில்லாத வாங்கும் பழக்கத்தைக் குறைத்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்ய மக்களை ஊக்குவிப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
Nutri-Mark லேபிளும் அறிமுகம்
இதோடு, பல பேக்கேஜ் உணவுப் பொருட்களில் Nutri-Mark என்ற புதிய லேபிளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் A முதல் E வரை தரவரிசை இருக்கும்.
A – மிகவும் ஆரோக்கியமானது
E – உடல்நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல
இதைப் பார்த்து, எந்த உணவை வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக முடிவு செய்யலாம்.
இது Carrefour-ல் மட்டும் தானா?
தற்போது சில Carrefour கிளைகளில் இந்த மாற்றம் தெரிந்தாலும், அபுதாபி அரசின் இந்த புதிய விதிமுறையை மற்ற சூப்பர் மார்க்கெட்டுகளிலும் படிப்படியாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் என்ன வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வதை எளிதாக்கும் சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்கு.
ஏற்கனவே அபுதாபியில் Fast Food விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் பள்ளி உணவுகளுக்கான புதிய தரநிலைகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய முயற்சியும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
