அமீரகத்தில் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 15 வயதுக்குட்பட்டவர்கள் தனிப்பட்ட Social Media கணக்குகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ முடியாத புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வர இன்னும் 12 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் Social Media நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதிய விதிகள்
2026 ஜூன் 18-ஆம் தேதி அமீரக அமைச்சரவை அறிவித்த இந்த விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட Social Media கணக்குகளை வைத்திருக்க முடியாது. மேலும், Social Media நிறுவனங்கள் வயதை உறுதிப்படுத்தும் (Age Verification) புதிய தொழில்நுட்பங்களை கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்ப்படும் பாதிப்புகள்
மனநல மருத்துவர்கள் கூறுவதன்படி, அதிக நேரம் Social Media பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, பதட்டம் (Anxiety), மனச்சோர்வு (Depression), தூக்கமின்மை, தன்னம்பிக்கை குறைவு, Cyberbullying, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதோடு, உடற்பயிற்சி குறைதல், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரடியாக பழகும் வாய்ப்பு குறைதல், சில குழந்தைகளுக்கு மொழித்திறன் மற்றும் சமூகத் திறன் வளர்ச்சியில் தாமதம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக Screen Time மற்றும் வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது, ADHD (Attention Deficit Hyperactivity Disorder) அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், Social Media-வே ADHD-க்கு காரணம் என்று சொல்ல முடியாது என்றும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
சட்டம் மட்டுமே போதாது
பள்ளிகள் Digital Safety குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தாலும், அதுமட்டும் போதாது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகள், பெற்றோர்கள், அரசு மற்றும் Social Media நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் சூழலை உருவாக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வயதை எப்படி சரிபார்ப்பார்கள்?
புதிய விதிகளின்படி, Social Media நிறுவனங்கள் பயனாளர்களின் வயதை வெறும் பிறந்த தேதி மூலம் மட்டுமல்லாமல், அமீரக Digital ID, அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்கள், Biometric Verification, AI மூலம் வயதை கணிக்கும் தொழில்நுட்பம், அரசு அங்கீகரித்த Age Verification சேவைகள் போன்ற முறைகள் மூலம் சரிபார்க்கலாம்.
VPN பயன்படுத்தி விதியை மீறலாமா?
அமீரகத்தில் VPN பயன்படுத்துவது பொதுவாக தடை செய்யப்படவில்லை. ஆனால், 15 வயதுக்குட்பட்டவர்கள் Social Media-வை அணுக இந்த விதியை மீற VPN பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தனியுரிமையும் முக்கியம்
வயதை சரிபார்க்க புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக கையாளப்பட வேண்டும் என்று Cybersecurity நிபுணர்கள் கூறுகின்றனர். தேவையற்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காமல், பாதுகாப்பான முறையில் இந்த அமைப்புகள் செயல்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த புதிய விதியின் நோக்கம் குழந்தைகளை Social Media-வில் இருந்து முழுமையாக விலக்குவது அல்ல. அவர்கள் பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற ஆன்லைன் சூழலில் இணையத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதே அமீரக அரசின் முக்கிய இலக்காகும்.
