வெளிநாடுகளில் இருந்து துபாயில் இறக்குமதி செய்யப்படும் AED 1,000 வரையிலான மதிப்புள்ள பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வணிகச் சூழலை மேம்படுத்துதல், மின்னணு வர்த்தக துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தக செலவுகளைக் குறைக்கும் நோக்கில் துபாய் சுங்கத்துறை புதிய திருத்தங்களை அறிவித்துள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கு வரி விலக்கு
புதிய விதிகளின்படி, வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் AED 1,000 அல்லது அதற்கு குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்த வரி விலக்கு சலுகை பொருந்தாது என துபாய் சுங்கத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் அதன் பாகங்களுக்கு இந்த வரி விலக்கு சலுகை வழங்கப்பட மாட்டாது.
தனிநபர் பயன்பாட்டிற்காக ஆர்டர் செய்யப்பட்டு, பின்னர் வெளிநாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் பொருட்களுக்கு சுங்க வரியில் விலக்கு பெறுவதற்கான புதிய நிபந்தனையை துபாய் சுங்கத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, அப்பொருளுக்கு ஏற்கனவே சுங்க வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அவை மீண்டும் திரும்பக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறைகள் ஆகஸ்ட் 3 முதல் அமலுக்கு வந்துள்ளது.
